செவ்வாய், 20 ஏப்ரல், 2010

ஐஸ்லாந்தில் உள்ள எரிமலையொன்று வெடித்து

ஐஸ்லாந்தில் உள்ள எரிமலையொன்று வெடித்து தொன் கணக்கில் புகையை கக்கத் தொடங்கியிருப்பது இன்று முழு உலகையும் அதிரவைத்துள்ளது. 11 கிலோ மீற்றர் உயரத்துக்கு புகையும் சாம்பலும் பரவியுள்ளதால் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமன்றி ஏனைய நாடுகளிலும் விமானச் சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

இந்த எரிமலை இதற்கு முன் கி.பி. 921 மற்றும் 1612, 1812-13 ஆகிய ஆண்டுகளில் வெடித்துள்ளதாக புவியியல் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். ஐஸ்லாந்தில் 35 எரிமலைகள் உள்ளன. அவற்றில் வெடித்துப் புகையைக் கக்கிக் கொண்டிருக்கும் ஈயபியலக்யுக் எரிமலையைவிட பெரிய எரிமலைகளும் இருக்கின்றன.

1783 - 85 ஆம் ஆண்டு வரை லாவாக் எனும் எரிமலை வெடித்து ஐஸ்லாந்தின் கால்வாசி மக்களை காவு கொண்டதாக வரலாறு கூறுகிறது. ஆனால் ஈயபியலக்யுல் எரிமலையினால் உயிர்ச்சேதமோ பொருள் சேதமோ ஏற்படாதது நிம்மதியே.

ஐஸ்லாந்து எரிமலையில் இருந்து வெளியேறிய சாம்பல் தூசி மண்டலம் முழுமையாக மறைந்து விடுவதோடு விமானப் போக்குவரத்து சீரடைந்துவிடும். ஆனால் இதற்கு சில வேளை மாதக்கணக்கு கூட ஆகலாம் என புவியியல் ஆய்வாளர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

அண்மைக் காலங்களில் பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் நிகழ்ந்தாலும் எரிமலை வெடிப்பினால் பாரிய சேதங்கள் ஏற்பட்டது கிடையாது. ஆனால் கடந்த காலங்களில் எரிமலை வெடிப்புகளினால் பல்லாயிரம் உயிர்கள் பலியாகியுள்ளதோடு பல நகரங்கள் கூட புதைந்துள்ளன.

1883 ஆகஸ்ட் 26 இல் இந்தோனேஷியாவின் சுந்தா நிலச் சந்தியில் ஜகார்டாவின் மேற்கே உள்ள கிரகடோவாவின் நடுவே ஓர் அசுர எரிமலை வெடித்துப் பொங்கி எழுந்தது, புகை மண்டலம் வானில் 50 மைல் உயரத்தில் கிளம்பிக் கருமுகில் பூத வடிவில் வெளிப்பட்டு, பகலை இருட்டாக்கியது. சாம்பல் வீச்சு 290,000 சதுர மைல் பரவி அண்மையில் இருக்கும் ஜாவா, சுமத்ரா தீவுகளையும் கரிய மையால் வர்ணம் பூசியது.

அடுத்து அடுத்து எரிமலை நான்கு முறைகள் வெடித்தன. எரிமலைக் குமுறி வெடித்த இடி முழக்கம் 2500 மைல் தாண்டி மத்திய அவுஸ்திரேலியாவில் கேட்டதாம். வெடியின் சக்தி 100,000 ஹைடிரஜன் குண்டுகளின் ஆற்றலுக்கு ஒப்பானது என்று அனுமானிக்கப்படுகிறது.

வெடிப்பின் அழுத்த அலைகள் தணிந்து அடங்குவதற்குள் அவை பூமியின் சுற்றளவை (25,000 மைல்) ஏழு முறைச் சுற்றி வந்தனவாம். 1815 ஆம் ஆண்டு தாம்பராவில் தோன்றிய எரிமலை கிரகடோவாவைவிட மிக அதிகமாக 100 கியூபிக் கிலோ மீற்றர் பாறைக் கற்களைக் கக்கியதாக அறியப்படுகிறது.

கண்களுக்குத் தெரிந்தோ, தெரியாமலோ சுமார் 1500 உயிருள்ள எரிமலைகள் பூகோளத்தில் புதைந்து கொண்டுள்ளதாக அறியப்படுகின்றன. அவற்றில் 30 சதவீதம், மேற்தளத்தில் இல்லாமல், கடலடியில் குமிழியிட்டுக் கொண்டுள்ளன. குறிப்பாக, பசுபிக் மகா கடலில் தீ வளையம் எனப்படும் சங்கிலித் தொடர்ப் பகுதியில் வருடத்திற்கு 50 எரிமலைகள் வீதம் தோன்றுகின்றதாக ஆய்வாளர்கள் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர்.

இத்தாலியின் நேப்பில்ஸ் வளைகுடாப் பகுதியில் உள்ள வெஸ்சூவியஸ் சிகரம் உலகப் புகழ்பெற்றது. அதன் அருகே இருந்த சோம்மா எரிமலையில் கண்டெடுத்த எரிமலைக் கற்பாறை 300,000 ஆண்டு வயதுள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. கி.மு. 5960, கி. மு. 3580 ஆண்டுகளில் வெஸ்சூவியஸ் இருமுறை கக்கியது. சோம்மா வெஸ்சூவியஸ் கூட்டு எரிமலைச் சாம்பல் 25,000 ஆண்டு வயதுள்ளது.

அடுத்து கி.பி. 79 முதலாம் நூற்றாண்டில் வெஸ்சூவியஸ் சிகரத்தில் தீவிர எரிமலைக் குமுறல் கிளம்பி ஹெர்குலானியம், பாம்ப்பி என்னும் இருபெரும் நகரங்களும் புதைந்து போயின. எரிமலை கக்கிய விஷ வாயுவைச் சுவாசித்து 20,000 மக்கள் மாண்டனர். எரிமலை கொட்டிய கருஞ் சாம்பலையும், சகதியையும் அடுத்து பெய்த கடும் மழை இரு நகரங்களையும் மூடிப் புதைத்தது. சகதி வெள்ளத்தில் புதைந்தவர் மட்டும் 3360 பேர். 19 மணி நேரங்களில் சுமார் 4 கியூபிக் கிலோ மீட்டர் கருஞ்சாம்பல் நகரங்களில் கொட்டிக் குவிந்ததாம்.

எரிமலை வெடிப்பால் ஹெர்குலேனியம் பாம்பி ஆகிய நகரங்கள் புதைந்தன. புதை பொருள் ஆராய்ச்சிகளின் போது 1595 ஆம் ஆண்டு மறைந்த நகரங்களின் சில பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதற்கு பல நூறு வருடங்களின் பின்னர் தீய்ந்து போன மனிதச் சடலங்கள், நாய்களின் எழும்புக் கூடுகள், நகைகள், இத்தாலிய நாணயங்கள் என்பனவும் தோண்டி எடுக்கப்பட்டன.

அதற்கு பின்னரும் பல தடவைகள் வெஸ்சூவியஸ் சிகரத்தில் இருந்து எரிமலைகள் வெடித்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியது. 1944 ஆம் அண்டில் தான் இந்த எரிமலை கடைசியாக கொந்தளித்தது. இன்று வரை அது விழித்து எழவில்லை.

இந்த எரிமலை வெடிப்புகளுடன் ஒப்பிடுகையில் ஐஸ்லாந்து எரிமலை மிகச் சிறிய நிகழ்வு மட்டுமே

கருத்துகள் இல்லை: