செவ்வாய், 28 டிசம்பர், 2010

ஈரான் அணுசக்தி நாடு - அஹ்மத் நஜாத் பிரகடனம்

டெஹ்ரான்,டிச.29:ஈரான் மீது விதிக்கப்பட்டிருந்த தடைகளை தாண்டி அந்நாடு அணுசக்தி நாடாக மாறியுள்ளது என ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் பிரகடனப்படுத்தியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் நிர்பந்தத்தாலும், பிரச்சாரங்களை கட்டவிழ்த்துவிட்டும் ஈரானுக்கெதிராக ஐ.நா தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால், அவர்கள் அனைவரின் முயற்சிகளையெல்லாம் தோற்கடித்து ஈரான் அணு சக்தி நாடாக மாறியுள்ளது என கரஜில் தெற்கு நகரத்தில் கூடியிருந்த மக்களிடையே அஹ்மத் நஜாத் பிரகடனப்படுத்தினார்.

செவ்வாய், 21 டிசம்பர், 2010

சவூதி அரேபியாவுடனான நல்லுறவுக்கு முன்னுரிமை


டெஹ்ரான்,டிச.20:சவூதி அரேபியாவுடனான நல்லுறவுக்கு நான் முன்னுரிமை அளிப்பேன் என ஈரானின் புதிய வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் ஸலாஹி தெரிவித்துள்ளார்.
ஈரானின் அணுசக்திப் பற்றிய அச்சம் வளைகுடா பகுதியில் நிலவுவதை கருத்திக்கொண்டே இம்முடிவு எனக் கருதப்படுகிறது.
முக்கிய நட்பு நாடான துருக்கியுடனான உறவை பலப்படுத்தவும், ஐ.நாவில் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகளான சீனா மற்றும் ரஷ்யாவுடனான உறவை மேம்படுத்தவும் முன்னுரிமை அளிக்கப்போவதாக அலி அக்பர் ஸலாஹி தெரிவித்தார்.

இந்தியர்களின் மரணத்தண்டனை ரத்து

தோஹா,டிச.21:கத்தர் நாட்டில் இரண்டு இந்தியர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மரணத் தண்டனையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்துச் செய்தது.

கேரள மாநிலத்தைச்சார்ந்த மணிகண்டன் மற்றும் உண்ணிகிருஷ்ணன் ஆகியோரின் மரணத் தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.

கடந்த 2003 ஆம் ஆண்டு கத்தரில் இந்தோனேஷியாவைச் சார்ந்த இளம்பெண் கொலை வழக்குத் தொடர்பாக இருவரும் தண்டனை விதிக்கப்பட்டனர். இவர்களிருவரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீஸ் கூறியிருந்தது.
கடந்த 2006 ஆம் ஆண்டு இவர்களிருவருக்கும் மரணத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

சனி, 18 டிசம்பர், 2010

எங்கள் உயிர் உள்ளவரை இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம்


லெபனான்,டிச.18:"நாங்கள் உயிருடன் இருக்கும்வரை இஸ்ரேலை ஒருபோதும் அங்கீகரிக்கமாட்டோம். மேலும் ஃபலஸ்தீனின் ஒரு இஞ்ச் நிலத்தைக்கூட விட்டுக் கொடுக்கமாட்டோம்" என லெபனான் ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கத்தின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் தெரிவித்துள்ளார்.

புதன், 8 டிசம்பர், 2010

இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை முடக்குவதற்கான முயற்சி தோல்வியைத் தழுவியதாக அமெரிக்கா

வாஷிங்டன்,டிச.9:மேற்காசியாவின் அமைதிக்கான முக்கிய காரணியான ஃபலஸ்தீனின் மேற்குகரையில் இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை தடுத்து நிறுவதற்கான தங்களுடைய முயற்சி தோல்வியைத் தழுவியதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜெ.க்ரவ்லி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஆனால், தங்களுடைய முயற்சியிலிருந்து முற்றிலும் இதுவரை பின்வாங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட சூழலில் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதன் காரணமாக பேச்சுவார்த்தையை ஒத்திவைத்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹூத் பாரக் தெரிவித்துள்ளார்.

வடகொரியா பிரச்சனையும் அமெரிக்காவிற்கு தலைவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார். ஆனால் இதனை மறுத்துள்ள பி.ஜெ.க்ரவ்லி தங்களுடைய செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவித்தார்.

இரு பிரிவினர்களுக்கிடையே பேச்சுவார்த்தை துவங்குவதற்கு குடியேற்ற நிர்மாணத்தை தற்காலிமாக முடக்கும் மெரிட்டோரியம் தொடர்வதுதான் ஒரே வழி. ஆனால், எங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றிக்கிடைக்கவில்லை. ஆனாலும், இரு பிரிவினர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை தொடரும் என பி.ஜெ.க்ரவ்லி தெரிவித்தார்.

அமெரிக்காவின் தீர்மானத்தை படித்த பிறகே பதில் அளிக்க இயலும் என ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் மாஇன் ராஷித் அரீக்கத் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் ஆன்லைன் இணையதளத்திற்கு மாற்றாக புதிய இணையதளம்


கெய்ரோ,டி.9:கத்தர் நாட்டைச் சார்ந்த நிதி உதவியாளர்களுக்கும் இஸ்லாம் ஆன்லைன் இணையதள இதழின் ஆசிரியர் குழுவிற்கும் இடையே பல மாதங்கள் தொடர்ந்த மோதலுக்கு பின்னர் 10 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லான் ஆன்லைன் இணையதளத்தை உருவாக்கிய ஆசிரியர்குழு மாற்று இணையதளமாக ஆன் இஸ்லாம் டாட் நெட் (onislam.net) என்ற இணையதளத்தை கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி துவக்கியுள்ளது.

ஈரானுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை

ஜெனீவா,டிச.8:சுவிட்சர்லாந்து தலைநகரான ஜெனீவாவில் உலக வல்லரசு நாடுகளுடனான ஈரானின் முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவுப்பெற்றது.

பேச்சுவார்த்தையின் அடுத்தக்கட்டம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற இருக்கிறது. அணுசக்தித் தொடர்பான முக்கிய விஷயங்களில் பூரணமான பேச்சுவார்த்தை நடந்ததாக பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்த ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை தலைவர் பரோணஸ் ஆஷ்டன் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஒன்றும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஐ.நா விதித்துள்ள தடையை நீக்க ஈரான் கோரிக்கை விடுத்தது. அடுத்த ஆண்டு ஜனவரி கடைசியில் நடைபெறவிருக்கும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை சாதாரண விஷயங்களும், பரஸ்பர ஒத்துழைப்பும் நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என ஈரான் அதிகாரியை மேற்கோள்காட்டி பிரான்சு நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்சு, பிரிட்டன் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், ஜெர்மன் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

ஈரானின் பிரதிநிதியாக மூத்த அணுசக்தி மத்தியஸ்தர் ஸஈத் ஜலீல் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டார்.



செவ்வாய், 7 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸ்:போராளிகளின் பொருளாதார பின்னணி சவூதி அரேபியா - அமெரிக்கா

 வாஷிங்டன்,டிச.7:அல்காயிதா, தாலிபான், லஷ்கர்-இ-தய்யிபா உள்ளிட்ட போராளி அமைப்புகளுக்கு முக்கியமான பொருளாதார பின்னணி சவூதி அரேபியா என அமெரிக்கா கருதுகிறது.

இதனை விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ரகசியச் செய்தியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் சவூதி அரேபியாவை இத்தகைய அமைப்புகளின் உறைவிடமாக எழுதியுள்ளார்.

ஹஜ், ரமலான் வேளைகளில் இவ்வமைப்புகள் சவூதி அரேபியாவிலிருந்து நிதி திரட்டுவதாகவும் அந்த ஆவணங்களில் காணப்படுகிறது. அல்காயிதாவுக்கு நிதி சேர்வதை தடுக்க அமெரிக்கா முயலும் வேளையில் சவூதிஅரேபியா இவ்விவகாரத்தில் பெரிய அளவில் விருப்பம் காண்பிக்கவில்லை எனவும், அல்காயிதாவை ஆதரிக்கும் லஷ்கருக்கும், தாலிபானுக்கும் நிதி தாராளமாக கிடைப்பதாகவும் ஹிலாரி குறிப்பிடுகிறார்.

அதேவேளையில், அமெரிக்காவின் நிர்பந்தம் மூலம் அல்காயிதாவின் பொருளாதார வரவை தடுப்பதில் ஓரளவு வெற்றிப் பெற்றிருப்பதாகவும் ஹிலாரி ஆறுதல் கொள்கிறார்.

புனித யாத்ரீகர்கள் போர்வையில் ஹஜ்ஜிற்கு வருவதால் சவூதி அரேபியாவிற்கு இவ்விவகாரத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது சிரமமாகும் எனவும் அந்த ஆவணங்களில் காணப்படுகிறது.

ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை துவங்கியது

 ஜெனீவா,டிச.7:ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானுக்கும் உலகின் வல்லரசு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்து தலைநகரமான ஜெனீவாவில் துவங்கியது.

ஒரு வருடத்திற்கு பிறகு முதன்முறையாக உலகநாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதி காதரின் அஷ்டன் தலைமை வகிக்கும் இப்பேச்சுவார்த்தையில் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

ஈரானின் பிரதிநிதியாக மூத்த அணுசக்தி மத்தியஸ்தர் ஸஈத் ஜலீல் பங்கேற்கிறார். அணுசக்தி திட்டத்தில் முக்கிய காரணியான செறியூட்டப்படாத யுரேனியத்தை உள்நாட்டில் நிர்மாணிப்பதில் தாங்கள் வெற்றிப் பெற்றிருப்பதாக ஈரான் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தது.

ஈரான் அணு ஆயுதங்களை நிர்மாணிப்பதாக கூறும் மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டிற்கு அந்நாடு மறுப்புத் தெரிவித்திருந்தது.

அணு ஆயுதங்களின் காலம் கடந்துவிட்டது - அஹ்மத் நஜாத்

டெஹ்ரான்,டிச.7:அணு ஆயுதங்களின் காலம் கழிந்துவிட்டதாகவும், அமெரிக்க ஆப்கன், ஈராக் நாடுகளை ஆக்கிரமித்து நடத்திய போர்களில் அணு ஆயுதங்களை பயன்படுத்தாதது இதனை தெளிவுப்படுத்துவதாகவும் ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் டெஹ்ரானில் ஒரு மாநாட்டில் உரையாற்றும் பொழுது குறிப்பிட்டார்.

மேற்கத்திய சக்திகளிடம் ஏராளமான அணுகுண்டுகள் உள்ளன. பின்னர் ஏன் அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக ஈரான் அணுஆயுதம் நிர்மாணிக்கு விவகாரத்தில் கவலை கொள்கின்றனர்?என நஜாத் கேள்வி எழுப்பினார்.

மேற்கத்திய சக்திகளுக்கு ஏதோ சிறப்பான திறமைகளும், பதவிகளும் உண்டு என சிலர் கருதுகின்றனர். ஆனால், பொருளாதார நெருக்கடியை சந்தித்த பொழுது என்ன நடந்தது என்பதை நாம் கண்டோம் எனவும் நஜாத் கூறினார்.

கடந்த வாரம் ஈரான் அணு விஞ்ஞானிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்த நஜாத், 'ஈரானின் செயல்பாடுகளைக் குறித்து அமெரிக்கா அஞ்சுகிறது. எங்களின் செயல்பாடுகளில் மிரண்டுபோன அமெரிக்கா அணுசக்தி விஞ்ஞானிகளை கொலைச் செய்கிறது' என குற்றஞ்சாட்டினார்

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

கத்தரில் உலகக்கோப்பை கால்பந்து: ஒபாமாவின் அறிக்கைக்கு எதிராக டாக்டர் யூசுஃப் அல் கர்தாவி

தோஹா,டிச.6:2022 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் நாடாக கத்தர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை நடத்தும் நாடுகளுக்கிடையேயான போட்டியில் அமெரிக்காவை பின் தள்ளிவிட்டு கத்தர் தேர்வுச் செய்யப்பட்டது தவறான தீர்மானம் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

வளைகுடா ஒத்துழைப்பு கூட்டமைப்பின்(ஜி.சி.சி) முக்கியத்துவம் வாய்ந்த உச்சிமாநாடு இன்று

அபுதாபி,டிச.6:வளைகுடா ஒத்துழைப்பு கூட்டமைப்பின்(ஜி.சி.சி) அங்க நாடுகளின் 31 வது உச்சிமாநாடு இன்று அபுதாபியில் யு.ஏ.இ அதிபர் ஷேக் கலீஃபா பின் ஸயீத் அல் நஹ்யானின் தலைமையில் துவங்கும்.

இரண்டு தினங்களாக நடைபெறும் இந்த உச்சிமாநாடு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும் என ஜி.சி.சியின் பொதுச் செயலாளர் அப்துல் றஹ்மான் ஆதிய்யா பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மாறுபட்ட தீர்மானங்கள் இம்மாநாட்டில் எடுக்கப்படும் என ஆதிய்யா தெரிவித்தார். ஜி.சி.சி நாடுகள் நடைமுறைப்படுத்தப்போகும் ஒரே நாணயம், கஸ்டம்ஸ், பொதுசந்தை, ஜி.சி.சி நாடுகளை இணைக்கும் ரெயில்வே, சக்தி, சுதந்திர வியாபாரம் உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றத்தைக் குறித்து விவாதிக்கப்படும்.

அபுதாபியில் எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில் வைத்து இம்மாநாடு நடைபெறுகிறது. ஒரே நாணயம் திட்டத்திலிருந்து விலகி நின்ற யு.ஏ.இ இத்திட்டத்தில் சம்மதம் தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானின் அணுசக்தி திட்டம், ஈரான் கைப்பற்றிய யு.ஏ.இயின் மூன்று தீவுகள், ஈராக், ஃபலஸ்தீன் உள்ளிட்ட விவகாரங்கள் இம்மாநாட்டில் விவாதிக்கப்படும்.

சவூதி அரேபியா, யு.ஏ.இ, ஒமான், பஹ்ரைன், குவைத், கத்தர் ஆகிய நாடுகளின் கூட்டமைப்புதான் ஜி.சி.சி.

ரியாத்:லிஃப்ட் கீழே விழுந்ததில் 7 பேர் மரணம்

 ரியாத்,டிச.5:சவூதி அரேபியா தலைநகர் ரியாதில் வஸீம் சாலையில் அமைந்துள்ள அப்துல்லாஹ் ஃபினான்சியல் சிட்டியில் கட்டுமானப் பணிகள் நடந்துகொண்டிருந்த கட்டிடம் ஒன்றில் லிஃப்ட் கீழே விழுந்ததில் இந்தியர் உட்பட 7 பேர் மரணித்துள்ளனர்.

கிங் அப்துல்லாஹ் ஃபைனான்சியல் சிட்டியில் முதலாவது வாசலில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. இவர்களில் நான்கு பேர் பாகிஸ்தானைச் சார்ந்தவர்களாவர். இரண்டுபேர் இந்தியாவைச் சார்ந்தவர்கள். ஒருவர் பங்களாதேஷைச் சார்ந்தவராவார்.

விக்கிலீக்ஸ்:கத்தர் ஆபத்தான நாடு - அமெரிக்காவுக்கு மொஸாத் அளித்த எச்சரிக்கை

தோஹா,டிச.5:கத்தர் ஆபத்தான நாடு என அமெரிக்காவுக்கு மொஸாத் எச்சரிக்கை அளித்ததாக விக்கிலீக்ஸ் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஜூலை 12 ஆம் தேதி அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு குழுவின் உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின்போது மொஸாதின் முன்னாள் தலைவர் மீர் தாகன் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

சனி, 4 டிசம்பர், 2010

அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தமாட்டோம் - ஈரான்

 மனாமா,டிச.5:ஈரான் நம்மீது தாக்குதல் நடத்திவிடுமோ என்ற பயம் அரபு நாடுகளுக்கு தேவையில்லை என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் மனுஷஹர் முத்தகி அறிவித்துள்ளார்.
ஈரான் அண்டை நாடுகளை தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக அண்மையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் வெளியிட்ட அறிக்கைக்கு பதில் அளித்துள்ளார் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்.

வெள்ளி, 3 டிசம்பர், 2010

அமெரிக்க-இஸ்ரேல் உறவை வெளிக்கொணர விக்கிலீக்ஸ் தயாராகவேண்டும் - அரபுநாட்டு மக்கள்

 தோஹா,டிச.4:இஸ்ரேலின் நிர்பந்தங்களுக்கு அமெரிக்கா அடிபணிவதைக் குறித்த விபரங்களை வெளியிட்டால் மட்டுமே விக்கிலீக்ஸின் நம்பகத் தன்மையை உறுதிச்செய்ய இயலும் என அரபு நாட்டுமக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அத்தகையதொரு அதிர்ச்சி தகவலுக்காக தாங்கள் காத்திருப்பதாக அரபு நாட்டு மக்கள் தெரிவிப்பதாக பெனின்சூலா செய்தி வெளியிட்டுள்ளது.

ஈரான் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்தால்... - அஹ்மத் நஜாத் எச்சரிக்கை

டெஹ்ரான்,டிச.4:ஈரான் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்ந்தால் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளை சட்டத்தின் முன்னால் நிறுத்துவோம் என ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நஜாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நேற்று முன்தினம் இரண்டு ஈரான் அணுசக்தித்துறை விஞ்ஞானிகள் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இதுக்குறித்து தெரிவித்துள்ளார் நஜாத்.

அமெரிக்க சிறையில் முஸ்லிம் சிறைக்கைதியை சித்திரவதைச் செய்யும் காட்சி வெளியானது

வாஷிங்டன்,டிச.4:சிறை அதிகாரிகளின் முன்னிலையில் சக கைதியொருவர் முஸ்லிம் சிறைக் கைதியை கொடூரமாக தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அசோசியேட் ப்ரஸ்ஸிற்கு கிடைத்த வீடியோ காட்சிகள் அமெரிக்க சிறையில் உள்ளத்தை அதிர்க்குள்ளாக்கும் விதமாக நடத்தப்படும் சித்திரவதையை வெளியுலகுக்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.