புதன், 8 டிசம்பர், 2010

இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை முடக்குவதற்கான முயற்சி தோல்வியைத் தழுவியதாக அமெரிக்கா

வாஷிங்டன்,டிச.9:மேற்காசியாவின் அமைதிக்கான முக்கிய காரணியான ஃபலஸ்தீனின் மேற்குகரையில் இஸ்ரேல் குடியேற்ற நிர்மாணத்தை தடுத்து நிறுவதற்கான தங்களுடைய முயற்சி தோல்வியைத் தழுவியதாக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பி.ஜெ.க்ரவ்லி பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். ஆனால், தங்களுடைய முயற்சியிலிருந்து முற்றிலும் இதுவரை பின்வாங்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
விக்கிலீக்ஸ் அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை வெளியிட்ட சூழலில் அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ மட்டத்தில் குழப்பம் ஏற்பட்டதன் காரணமாக பேச்சுவார்த்தையை ஒத்திவைத்துள்ளதாக இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை அமைச்சர் யஹூத் பாரக் தெரிவித்துள்ளார்.

வடகொரியா பிரச்சனையும் அமெரிக்காவிற்கு தலைவேதனையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் கூறினார். ஆனால் இதனை மறுத்துள்ள பி.ஜெ.க்ரவ்லி தங்களுடைய செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என தெரிவித்தார்.

இரு பிரிவினர்களுக்கிடையே பேச்சுவார்த்தை துவங்குவதற்கு குடியேற்ற நிர்மாணத்தை தற்காலிமாக முடக்கும் மெரிட்டோரியம் தொடர்வதுதான் ஒரே வழி. ஆனால், எங்களுடைய முயற்சிகளுக்கு வெற்றிக்கிடைக்கவில்லை. ஆனாலும், இரு பிரிவினர்களுக்கிடையேயான பேச்சுவார்த்தை தொடரும் என பி.ஜெ.க்ரவ்லி தெரிவித்தார்.

அமெரிக்காவின் தீர்மானத்தை படித்த பிறகே பதில் அளிக்க இயலும் என ஃபலஸ்தீன் அதிபர் மஹ்மூத் அப்பாஸின் செய்தித் தொடர்பாளர் மாஇன் ராஷித் அரீக்கத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: