சனி, 24 ஏப்ரல், 2010

ஈரான் சிறையிலிருக்கும் அமெரிக்கர் மூவரை விடுவிக்க வலியுறுத்தல்

வாஷிங்டன்:ஈரானால் சிறை வைக்கப்பட்டுள்ள மூன்று அமெரிக்கர்களை உடனடியாக அந்நாட்டு அரசு விடுதலை செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறியதாவது;

கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஈரான் நாட்டுக்குள் சட்டவிரோதமாக வந்ததாக அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் இது குறித்து அவர்கள் மீது முறையான குற்றச்சாட்டு எதையும் ஈரான் அரசு பதிவு செய்யவில்லை. இந்நிலையில் கடந்த ஒன்பது மாதங்களாக அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனால் அவர்கள் உடல் நிலை பாதிப்படைந்து வருகிறது. எனவே, அவர்கள் மூவரையும் விடுவித்து, சொந்த நாட்டுக்கு அவர்கள் திரும்புவதற்கு ஈரான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

ஈரான் ஜிம்பாவே இடையே அறிவியல்,தொழில்நுட்பம் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்து

ஆப்ரிக்கா நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஈரான் அதிபர் அஹ்மத் நிஜாத், கடந்த வியாழனன்று ஜிம்பாவே சென்றிருந்தார். அப்பொழுது இரு நாடுகளுக்கிடையே ஏராளமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

அறிவியல்,சுற்றுலா,தொழில்நுட்பம், இளைஞர் விவகாரங்கள், போக்குவரத்து, விமானப் போக்குவரத்து மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இவ்விரு நாடுகளுக்கிடையே உடன்பாடுகள் கையெழுத்தாயின.

மேலும்,ஈரானின் ஏற்றுமதி உத்திரவாதம் மற்றும் ஜிம்பாவே நிதி அமைச்சகத்திற்கிடையே விஞ்ஞானம்,நாகரீகம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு போன்ற பல ஒப்பந்தங்களும் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இதற்கிடையே, ஈரானின் 3 நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்த டிராக்டர் பிரிவு கலையை ஜிம்பாவே அதிபர் ராபர்ட் முகாபே பார்வையிட்டார். இதை ஜிம்பாவேயில் தொடங்கி வைக்கும் வகையில், விழாவில் ஈரான் அதிபர் ஜிம்பாவே அதிபரிடம் டிராக்டரின் ஸ்விட்சை ஒப்படைத்தார்

இஸ்ரேலிய உளவாளி லெபனானில் கைது

பெய்ரூட்:லெபனானின் தெற்குப் பகுதியில் ஆட்டோமொபைல் வியாபாரி போல் வேடமிட்டு இஸ்ரேலுக்கு உளவுப் பார்த்த உளவாளியை லெபனான் உளவுத்துறை கைதுச் செய்தது.

நேற்று மாலையில் கியாம் நகரில் வைத்து இவர் கைதுச் செய்யப்பட்டார். இதனை லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் லெபனான் உளவுத்துறை அதிகாரிகள் 14 இஸ்ரேலிய உளவு நெட்வொர்க்கை பூண்டோடு அழித்தனர். மேலும் இதுத்தொடர்பாக 80 இஸ்ரேலிய உளவாளிகளையும் கைதுச் செய்தனர். கைதுச் செய்யப்பட்டவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணத்தண்டனை விதிக்கப்படும்.

பெரும்பாலான உளவுவேலைப் பார்க்கும் இஸ்ரேலிய உளவாளிகளை ஹிஸ்புல்லாஹ் போராளி இயக்கம் கண்டறிந்து பிடித்து லெபனான் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளது.