செவ்வாய், 7 டிசம்பர், 2010

விக்கிலீக்ஸ்:போராளிகளின் பொருளாதார பின்னணி சவூதி அரேபியா - அமெரிக்கா

 வாஷிங்டன்,டிச.7:அல்காயிதா, தாலிபான், லஷ்கர்-இ-தய்யிபா உள்ளிட்ட போராளி அமைப்புகளுக்கு முக்கியமான பொருளாதார பின்னணி சவூதி அரேபியா என அமெரிக்கா கருதுகிறது.

இதனை விக்கிலீக்ஸ் வெளியிட்ட அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ரகசியச் செய்தியில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் சவூதி அரேபியாவை இத்தகைய அமைப்புகளின் உறைவிடமாக எழுதியுள்ளார்.

ஹஜ், ரமலான் வேளைகளில் இவ்வமைப்புகள் சவூதி அரேபியாவிலிருந்து நிதி திரட்டுவதாகவும் அந்த ஆவணங்களில் காணப்படுகிறது. அல்காயிதாவுக்கு நிதி சேர்வதை தடுக்க அமெரிக்கா முயலும் வேளையில் சவூதிஅரேபியா இவ்விவகாரத்தில் பெரிய அளவில் விருப்பம் காண்பிக்கவில்லை எனவும், அல்காயிதாவை ஆதரிக்கும் லஷ்கருக்கும், தாலிபானுக்கும் நிதி தாராளமாக கிடைப்பதாகவும் ஹிலாரி குறிப்பிடுகிறார்.

அதேவேளையில், அமெரிக்காவின் நிர்பந்தம் மூலம் அல்காயிதாவின் பொருளாதார வரவை தடுப்பதில் ஓரளவு வெற்றிப் பெற்றிருப்பதாகவும் ஹிலாரி ஆறுதல் கொள்கிறார்.

புனித யாத்ரீகர்கள் போர்வையில் ஹஜ்ஜிற்கு வருவதால் சவூதி அரேபியாவிற்கு இவ்விவகாரத்தில் உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது சிரமமாகும் எனவும் அந்த ஆவணங்களில் காணப்படுகிறது.

ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை துவங்கியது

 ஜெனீவா,டிச.7:ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரானுக்கும் உலகின் வல்லரசு நாடுகளுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்து தலைநகரமான ஜெனீவாவில் துவங்கியது.

ஒரு வருடத்திற்கு பிறகு முதன்முறையாக உலகநாடுகள் ஈரானுடன் பேச்சுவார்த்தை இவ்விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

ஐரோப்பிய யூனியனின் பிரதிநிதி காதரின் அஷ்டன் தலைமை வகிக்கும் இப்பேச்சுவார்த்தையில் பிரிட்டன், பிரான்சு, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கின்றனர்.

ஈரானின் பிரதிநிதியாக மூத்த அணுசக்தி மத்தியஸ்தர் ஸஈத் ஜலீல் பங்கேற்கிறார். அணுசக்தி திட்டத்தில் முக்கிய காரணியான செறியூட்டப்படாத யுரேனியத்தை உள்நாட்டில் நிர்மாணிப்பதில் தாங்கள் வெற்றிப் பெற்றிருப்பதாக ஈரான் கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தது.

ஈரான் அணு ஆயுதங்களை நிர்மாணிப்பதாக கூறும் மேற்கத்திய நாடுகளின் குற்றச்சாட்டிற்கு அந்நாடு மறுப்புத் தெரிவித்திருந்தது.

அணு ஆயுதங்களின் காலம் கடந்துவிட்டது - அஹ்மத் நஜாத்

டெஹ்ரான்,டிச.7:அணு ஆயுதங்களின் காலம் கழிந்துவிட்டதாகவும், அமெரிக்க ஆப்கன், ஈராக் நாடுகளை ஆக்கிரமித்து நடத்திய போர்களில் அணு ஆயுதங்களை பயன்படுத்தாதது இதனை தெளிவுப்படுத்துவதாகவும் ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் டெஹ்ரானில் ஒரு மாநாட்டில் உரையாற்றும் பொழுது குறிப்பிட்டார்.

மேற்கத்திய சக்திகளிடம் ஏராளமான அணுகுண்டுகள் உள்ளன. பின்னர் ஏன் அவர்கள் கடந்த மூன்று வருடங்களாக ஈரான் அணுஆயுதம் நிர்மாணிக்கு விவகாரத்தில் கவலை கொள்கின்றனர்?என நஜாத் கேள்வி எழுப்பினார்.

மேற்கத்திய சக்திகளுக்கு ஏதோ சிறப்பான திறமைகளும், பதவிகளும் உண்டு என சிலர் கருதுகின்றனர். ஆனால், பொருளாதார நெருக்கடியை சந்தித்த பொழுது என்ன நடந்தது என்பதை நாம் கண்டோம் எனவும் நஜாத் கூறினார்.

கடந்த வாரம் ஈரான் அணு விஞ்ஞானிகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்த நஜாத், 'ஈரானின் செயல்பாடுகளைக் குறித்து அமெரிக்கா அஞ்சுகிறது. எங்களின் செயல்பாடுகளில் மிரண்டுபோன அமெரிக்கா அணுசக்தி விஞ்ஞானிகளை கொலைச் செய்கிறது' என குற்றஞ்சாட்டினார்