ஞாயிறு, 28 நவம்பர், 2010

ஈராக் விமானநிலையப் பணியாளரை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது

பாக்தாத்,நவ.29:ராணுவ அணிவரிசைக்கு அருகே வாகனத்தை ஓட்டிச் சென்ற ஈராக் விமானநிலைய பணியாளரை அமெரிக்க ராணுவம் அநியாயமாக சுட்டுக் கொன்றுள்ளது.

தங்களை தாக்கவருகிறார் என தவறாக புரிந்துக் கொண்டதன் விளைவாகவே அவரை சுட்டதாக சமாதானம் கூறுகிறது அமெரிக்க ராணுவ வட்டாரம்.

பாக்தாத் சர்வதேச விமானநிலையத்தில் பணியாற்றும் கரீம் உபைத் பர்தான் என்பவர்தான் சுட்டுக் கொல்லப்பட்ட நபராவார். ராணுவ அணிவரிசைக்கு அருகே வாகனத்தை ஓட்டிவரும் பொழுது கரீம் ஹெட்லை போடுவது, வேகத்தை குறைப்பது போன்ற கட்டளைகளை கவனிக்காமலிருந்ததுதான் அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக் காரணம் என அமெரிக்க,ஈராக் ராணுவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

:ஈரானை தாக்க வேண்டுமென அரபு நாடுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்ததாக தகவல்

நவ.29:ஈரான் மீது தாக்குதல் நடத்தி அந்த விஷப் பாம்பின் தலையை அறுக்கவேண்டும் எனவும் அரபு நாடுகள் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்தது, ஐ.நா தலைமையின் நடவடிக்கைகளை ரகசியமாக கண்காணிக்க அமெரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் உத்தரவிட்டது உள்ளிட்ட மிக ரகசியமான ஆவணங்களை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு அமெரிக்க தூதரகங்கள் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அனுப்பிய 251287 செய்திகளில் 200ஐ விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. இதுத்தொடர்பான மேலும் விபரங்கள் விரைவில் வெளியாகும்

விக்கிலீக்ஸ்:பிரிட்டனிலும் பீதி

 லண்டன்,நவ.28:விக்கிலீக்ஸ் இணையதளம் புதிதாக வெளியிடவிருக்கும் ரகசிய ஆவணங்களால் பிரிட்டன் அதிகாரிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

தங்களின் தனிப்பட்ட தொடர்புகளைக் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த சில விபரங்கள் வெளிவர வாய்ப்பிருப்பதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூனிடம் லண்டனில் அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் டவுனிங் ஸ்ட்ரீட்டிற்கு வருகைத் தந்தார்.

லண்டனில் அமெரிக்க தூதரகம் வாஷிங்டனிற்கு அனுப்பிய சில விபரங்களையும் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்டன் ப்ரவுனின் தனிப்பட்டத் தன்மை, பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக் குறித்து அமெரிக்காவின் மதிப்பீடு, லோக்கர்பி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் லிபியாவுக்கு சென்றதுத் தொடர்பாக நடந்த ரகசிய பேச்சுவார்த்தைகள் ஆகியன வெளியாகும் என பீதியில் ஆழ்ந்துள்ளது பிரிட்டன்.

அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து பிரான்சுக்கு எதிராக நடத்திய முயற்சிகள் இதில் வெளியாகும் எனத் தெரிகிறது.

துருக்கியில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள குர்து இனத்தவருக்கு அமெரிக்கா அளித்த உதவியும் விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்களில் அடங்கும் என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் வெளியானால் பல நாடுகளும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் சூழல் ஏற்படும் என அஞ்சி அமெரிக்கா பல நாடுகளுடன் அவசரமாக தொடர்புக்கொண்டு வருகிறது

அல்காயிதாவுடன் தொடர்பு:சவூதியில் 149 பேர் கைது

ரியாத்,நவ.28:கடந்த எட்டு மாதங்களுக்கிடையே அல்காயிதா இயக்கத்துடன் தொடர்புடைய 149 பேரை கைதுச் செய்துள்ளதாக சவூதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.

பாதுகாப்பு அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோர்களுக்கெதிரான தாக்குதல் திட்டங்களை முறியடித்து விட்டதாகவும் சவூதி உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் மன்சூர் இப்னு துர்க்கி தெரிவித்துள்ளார்.