ஞாயிறு, 28 நவம்பர், 2010

விக்கிலீக்ஸ்:பிரிட்டனிலும் பீதி

 லண்டன்,நவ.28:விக்கிலீக்ஸ் இணையதளம் புதிதாக வெளியிடவிருக்கும் ரகசிய ஆவணங்களால் பிரிட்டன் அதிகாரிகள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.

தங்களின் தனிப்பட்ட தொடர்புகளைக் குறித்த முக்கியத்துவம் வாய்ந்த சில விபரங்கள் வெளிவர வாய்ப்பிருப்பதாக பிரிட்டன் பிரதமர் டேவிட் காமரூனிடம் லண்டனில் அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். இதற்காக அவர் டவுனிங் ஸ்ட்ரீட்டிற்கு வருகைத் தந்தார்.

லண்டனில் அமெரிக்க தூதரகம் வாஷிங்டனிற்கு அனுப்பிய சில விபரங்களையும் விக்கிலீக்ஸ் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்டன் ப்ரவுனின் தனிப்பட்டத் தன்மை, பொதுத் தேர்தலில் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக் குறித்து அமெரிக்காவின் மதிப்பீடு, லோக்கர்பி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் லிபியாவுக்கு சென்றதுத் தொடர்பாக நடந்த ரகசிய பேச்சுவார்த்தைகள் ஆகியன வெளியாகும் என பீதியில் ஆழ்ந்துள்ளது பிரிட்டன்.

அமெரிக்காவும், பிரிட்டனும் இணைந்து பிரான்சுக்கு எதிராக நடத்திய முயற்சிகள் இதில் வெளியாகும் எனத் தெரிகிறது.

துருக்கியில் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள குர்து இனத்தவருக்கு அமெரிக்கா அளித்த உதவியும் விக்கிலீக்ஸ் வெளியிடும் ஆவணங்களில் அடங்கும் என வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆவணங்கள் வெளியானால் பல நாடுகளும் அமெரிக்க தூதரக அதிகாரிகளை வெளியேற்றும் சூழல் ஏற்படும் என அஞ்சி அமெரிக்கா பல நாடுகளுடன் அவசரமாக தொடர்புக்கொண்டு வருகிறது

கருத்துகள் இல்லை: