சனி, 27 நவம்பர், 2010

சோமாலியா:ஒருவருடத்தில் கொல்லப்பட்ட சிவிலியன்கள்

மொகாதிஷு,நவ.27:போராளிகளுக்கும் அரசுப் படையினருக்கும் இடையே மோதல் நிகழ்ந்து வரும் சோமாலியா தலைநகரான மொகாதிஷுவில் இந்த ஆண்டு கொல்லப்பட்ட சாதாரண மக்களின் எண்ணிக்கை 2100 ஆகும்.

தலைநகரின் பக்கார சந்தையை நோக்கி ஆப்பிரிக்கா யூனியன் ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில்தான் 80 சதவீத சிவிலியன்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனை லைஃப் லைன் ஆப்ரிக்கா ஆம்புலன்ஸ் சர்வீஸ் இயக்குநர் அலி மூஸ் தெரிவிக்கிறார்.

155 சிறுவர்களை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியாருக்கு ஏழு ஆண்டு சிறை

பெர்லின்,நவ.27:பாலகர்களை பாலியல் பலாத்காரம் செய்த முன்னாள் கத்தோலிக்க பாதிரியாருக்கு ஜெர்மன் நீதிமன்றம் ஏழு ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

155 சிறுவர்களை இவர் பாலியல் கொடுமைச் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. 50 வயது பாதிரியாரான இவர் காஸ்ஸல் நகரத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வந்தார்.

புகைபிடிப்பவர்கள் வெளியிடும் புகையினால் மரணிப்பவர்கள் ஆறு லட்சம் பேர்

வாஷிங்டன்,நவ.27:புகைப்பிடிப்பவர்கள் வெளிவிடும் புகையினால் உலகில் ஆண்டிற்கு ஆறு லட்சம்பேர் மரணிக்கின்றார்கள் என உலக சுகாதாரமையம் புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது.

இவ்வாய்வு 192 நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவோர் குழந்தைகளாவர். குழந்தைகளுக்கு நிமோனியா, ஆஸ்துமா போன்ற நோய்கள் உருவாக இது காரணமாகிறது.

ஃபலஸ்தீன்:யெர்ஸா கிராமத்தில் மஸ்ஜிதை இடித்துத் தள்ளிய இஸ்ரேல்

ஃபலஸ்தீன் மேற்குகரையில் யெர்ஸா கிராமத்தில் அமைந்திருந்த மஸ்ஜித் ஒன்றை இஸ்ரேலிய ராணுவம் இடித்து தள்ளியது.

ராணுவ புல்டோஸரை பயன்படுத்தி மஸ்ஜிதையும் இதர 10 கட்டிடங்களையும் ராணுவம் இடித்துத் தள்ளியது. இக்கட்டிடங்களும், மஸ்ஜிதும் ராணுவ பிராந்தியத்தில் கட்டப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.

மிகவும் பழமையான மஸ்ஜிதையும், அதனுடன் இணைந்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்தையும் இடித்து தள்ளிய இஸ்ரேலிய ராணுவம் அத்துடன் ஆடுகளை வளர்ப்பதற்காக பயன்படுத்திய 10 இதர கட்டிடங்களையும் இடித்துத் தள்ளியுள்ளது.

ராணுவ பிராந்தியத்தில் அனுமதியில்லாமல் கட்டப்பட்ட 10 கட்டிடங்களை இடித்துள்ளதாக இஸ்ரேலிய உள்துறை அமைச்சகம் கூறுகிறது.

இஸ்ரேலின் பூரண கட்டுப்பாட்டிலிலுள்ள மேற்குகரையின் சி பிராந்தியத்தில் அமைந்துள்ளது யெர்ஸா கிராமம். இங்கு எதனை கட்டவேண்டுமானாலும் இஸ்ரேலின் அனுமதியை பெறவேண்டும். கட்டிட நிர்மாணத்திற்கான 95 சதவீத மனுக்களையும் நிராகரிப்பதுதான் இஸ்ரேலின் வழக்கம்.

இதற்கிடையே மேற்குகரையில் யத்தா கிராமத்தில் 18 பேர் வசிக்கும் வீடு ஒன்றை இஸ்ரேல் ராணுவம் இடித்துத் தள்ளியுள்ளது. இதற்கான காரணம் கூறப்படவில்லை.

போலி தாலிபான் கமாண்டரை பேச்சுவார்த்தை நடத்த அனுப்பியது

ஆப்கானிஸ்தான் அரசுடன் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாலிபான் கமாண்டர் எனக்கூறி போலியான நபரை அனுப்பியவர்கள் பிரிட்டீஷ் அதிகாரிகள் என ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாயியின் பணிப் பிரிவுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தாலிபானின் மூத்த தலைவரான முல்லா முஹம்மத் மன்சூர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இந்நபர் ஆப்கான் அதிகாரிகளுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதோடு ஆயிரக்கணக்கான டாலர் பணத்தை சுருட்டிச் சென்றுவிட்டார்.

இவர் பாகிஸ்தானின் குவாட்டா பகுதியில் கடை நடத்தும் நபராவார் என பின்னர் தெரியவந்தது.

பிரிட்டன் தூதரக அதிகாரிகள்தான் இவரை தாலிபான் கமாண்டர் எனக்கூறி கர்ஸாயிடம் அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால், இதனைக் குறித்து பதில் கூற பிரிட்டன் தூதரகம் மறுத்துவிட்டது.

அதேவேளையில் பிரிட்டன் உளவு நிறுவனமான எம்.ஐ6 தான் போலி தாலிபான் கமாண்டரை அனுப்பியதாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சார்ந்த அந்த நபரின் வாய்ஜாலத்தில் உளவுத்துறை அதிகாரிகள் வீழ்ந்துவிட்டார்கள் என கருதப்படுகிறது. தாலிபானுடன் சமரசம் சாத்தியமாக்கலாம் என வாக்குறுதி அளித்த இந்நபர் பணத்தை கைப்பற்றியுள்ளார். இவரைப் பற்றி விபரங்களை பரிசோதிப்பதில் அமெரிக்காவும் உதவியதாக கருதப்படுகிறது.

இச்சம்பவத்தில் ஏற்பட்ட அபத்தத்திற்கு பிரிட்டன் மட்டும் காரணமல்ல எனவும் மற்றவர்களுக்கும் இதில் பங்குண்டு என காந்தஹாரில் அமெரிக்க பிரதிநிதி பில் ஹாரிஸ் கூறுகிறார்.