செவ்வாய், 27 ஏப்ரல், 2010

பிரான்ஸ்:மஸ்ஜிதில் துப்பாக்கிச்சூடு

பாரிஸ்:தெற்கு பிரான்சில் இஸ்டர்ஸ் நகரில் அமைந்திருக்கும் மஸ்ஜித் ஒன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுத்தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

இத்துப்பாக்கிச்சூடுத் தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் முஸ்லிம் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்புதர உறுதிப்பூண்டுள்ளதாக தெரிவித்தார். ப்ரான்காயிஸ் ஃபில்லனின் அலுவலகம் முஸ்லிம் தலைவர்களிடம் தமது ஆழ்ந்த கவலையையும், ஆதரவையும் தெரிவித்துக் கொண்டது.

மஸ்ஜிதின் மீது நேற்று அதிகாலைக்கு முன்பு 30 தடவை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் தெரிவிக்கிறது. கடந்த சனிக்கிழமை இரவு மார்சிலே என்ற தென் துறைமுக நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய (ஹலால்) இறைச்சி வியாபாரம் செய்யும் கடையின் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

பிரான்சின் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றிணைக்கும் அமைப்பின் தலைவர் முஹம்மது மூஸாவி இதுக்குறித்து தெரிவிக்கையில்; "மஸ்ஜிதில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது மிகக்கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பிரான்சின் ஊடகங்கள் இந்நிகழ்ச்சிக்கு பதிலாக ஒரு முஸ்லிம் நபர் பல பெண்களை திருமணம் செய்ததை பெரிதுப்படுத்துகிறது." என்றார்.

பிரான்சின் உள்துறை அமைச்சரும் அந்த நபர் பல தாரமணம் புரிந்திருந்தால் அவருடைய குடியுரிமை பறிக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் சமூகத்தை நெருங்குவதற்கான முயற்சி தொடரும்

வாஷிங்டன்:முஸ்லிம் சமூகத்துடன் நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சி தொடரும் என அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அறிவித்துள்ளார்.

வாஷிங்டனில் நடந்த 50 முஸ்லிம் நாடுகளிலிலுள்ள தொழிலதிபர்கள் மாநாட்டில் உரையாற்றினார் அவர். முஸ்லிம் உலகத்துடனான உறவை பலப்படுத்துவதற்காக கல்வித்துறையிலும், தொழில்துறையிலும் ஏராளமான திட்டங்களையும் அவர் அறிவித்தார்.

தீவிரவாதத்தை ஒழித்துவிட்டு பொருளாதார வளர்ச்சியை உறுதிச் செய்யவும் மத்திய ஆசியாவில் ஆசுவாசமான சமாதானத்தை நிறுவுவதிலும் அமெரிக்கா உறுதிப்பூண்டுள்ளதாகவும் ஒபாமா தெரிவித்தார்.

எந்த தடைகள் ஏற்பட்டாலும், இரு நாடுகளுக்கிமிடையே ஏற்றுக் கொள்ளத்தக்க சமாதான முயற்சிகள் தொடரும்.ஆனால், தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் சமாதான பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்க புதிய முயற்சி தேவை என்றும் ஒபாமா தெரிவித்தார்.

இதுபோல் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும்,பாகிஸ்தானிலும் போராளிகளுக்கெதிரான போரை முடிவுக்கு கொண்டுவருவதிலும் அமெரிக்கா உறுதிப்பூண்டுள்ளது என்றும், போராளிகளை தனிமைப்படுத்துவதற்காக அமெரிக்க புதிய நட்புறவுகளை தேடுவதாகவும் ஒபாமா தெரிவித்தார்.

முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் பெண்களுக்கு அமெரிக்காவில் intern ஆக பணியாற்ற வாய்ப்பளிக்கப்படும் என ஒபாமா வாக்குறுதியளித்தார். கடந்த ஆண்டு கெய்ரோ பல்கலைக்கழகத்தில் ஒபாமா நடத்திய உரையில்;"முஸ்லிம்களும், அமெரிக்காவும் பரஸ்பர மதிப்பு ரீதியான புரிந்துணர்வுக் கொள்ளவேண்டும்" என கோரிக்கை விடுத்திருந்தார்

உமர் அல் பஷீர் மீண்டும் சூடான் அதிபராக

கார்த்தூம்:வடக்கு கிழக்கு ஆப்ரிக்க நாடான சூடானில் அதிபர் தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணித்ததைத் தொடர்ந்து நேசனல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் உமர் அல் பஷீர் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உமர் அல் பஷீர் அதிபராக நீடிப்பார் என தேர்தல் நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சூடான் தேர்தல் கமிஷன் சேர்மன் அபில் அலியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

1,01,14,310 வாக்குகளில் 68 சதவீத வாக்குகளைப் பெற்ற பஷீர் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டார். அதேவேளையில் சூடான் பீப்பிள்ஸ் லிபரேசன் மூவ்மெண்ட் தலைவர் ஸல்வா கீர் மாயார்டிட் தெற்கு சூடான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பகுதி சுய ஆட்சி மாகாணமான தெற்கு சூடானில் மட்டும் போட்டியிட்ட ஸல்வா 93 சதவீத வாக்குகளைப்பெற்று பெரும்பான்மையை நிரூபித்தார். பஷீருக்கு அடுத்த இடத்தைப்பெற்றவர் எஸ்.பி.எல்.எம் வேட்பாளர் யாஸிர் அர்மனாவார்.

முன்னாள் பிரதமரும் நேசனல் உம்மா கட்சியின் வேட்பாளருமான ஸாதிக்குல் மஹ்திக் 96,868 வாக்குகள் மட்டுமே பெற்றார். அதேவேளையில் சூடான் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் முஹம்மது இப்ராஹீம் அதிபர் தேர்தலில் மிகவும் பின் தங்கிவிட்டார். சூடானில் முதல் முறையாக பெண் வேட்பாளரான ஃபாத்திமா அப்துல் மஹ்மூதிற்கு 30,562 வாக்குகள் கிடைத்தன.

அதேவேளையில் மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுள்ள பஷீருக்கெதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தர்ஃபூர் போர் குற்றத்திற்கு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது

ஈரானுக்கு எதிராக ஐநாவின் புதிய பொருளாதார தடைகளை விரைவாக அமல்படுத்த ஒபாமா



ஈரானுக்கு எதிராக ஐநாவின் புதிய பொருளாதார தடைகளை விரைவாக அமல்படுத்த வைப்பதில் அமெரிக்க அதிபர் ஒபாமா தீவிரமாக உள்ளதாக அமெரிக்க பொது விவகாரங்களுக்கான அமைச்சர் பி.ஜே.கிரவ்லி தெரிவித்துள்ளார்.

ஈரானுக்கு எதிரான தடைக்கு ஆதரவு திரட்டுவதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன், கடந்த வார இறுதியில் பல்வேறு உலக தலைவர்களுடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இத்தகவலை வாஷிங்டனில் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்த அமெரிக்க பொது விவகாரங்களுக்கான உதவி அமைச்சர் பி.ஜே.கிரவ்லி, "ஈரானுக்கு எதிரான ஐ.நா. தடையை எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக அமல்படுத்திட அதிபர் பராக் ஒபாமா விரும்புகிறார். இப்போதைக்கு இவ்விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளுடன் அமெரிக்கா தீவிரமாக பேசி வருகிறது" என்று தெரிவித்தார்.