செவ்வாய், 27 ஏப்ரல், 2010

பிரான்ஸ்:மஸ்ஜிதில் துப்பாக்கிச்சூடு

பாரிஸ்:தெற்கு பிரான்சில் இஸ்டர்ஸ் நகரில் அமைந்திருக்கும் மஸ்ஜித் ஒன்றின் மீது துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுத்தொடர்பாக போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

இத்துப்பாக்கிச்சூடுத் தொடர்பாக பிரான்ஸ் பிரதமர் முஸ்லிம் சமூகத்திற்கு முழு ஒத்துழைப்புதர உறுதிப்பூண்டுள்ளதாக தெரிவித்தார். ப்ரான்காயிஸ் ஃபில்லனின் அலுவலகம் முஸ்லிம் தலைவர்களிடம் தமது ஆழ்ந்த கவலையையும், ஆதரவையும் தெரிவித்துக் கொண்டது.

மஸ்ஜிதின் மீது நேற்று அதிகாலைக்கு முன்பு 30 தடவை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீஸ் தெரிவிக்கிறது. கடந்த சனிக்கிழமை இரவு மார்சிலே என்ற தென் துறைமுக நகரில் அமைந்துள்ள இஸ்லாமிய (ஹலால்) இறைச்சி வியாபாரம் செய்யும் கடையின் மீது துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

பிரான்சின் அனைத்து முஸ்லிம் அமைப்புகளையும் ஒன்றிணைக்கும் அமைப்பின் தலைவர் முஹம்மது மூஸாவி இதுக்குறித்து தெரிவிக்கையில்; "மஸ்ஜிதில் துப்பாக்கிச்சூடு நிகழ்ந்தது மிகக்கவனமாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது. பிரான்சின் ஊடகங்கள் இந்நிகழ்ச்சிக்கு பதிலாக ஒரு முஸ்லிம் நபர் பல பெண்களை திருமணம் செய்ததை பெரிதுப்படுத்துகிறது." என்றார்.

பிரான்சின் உள்துறை அமைச்சரும் அந்த நபர் பல தாரமணம் புரிந்திருந்தால் அவருடைய குடியுரிமை பறிக்கப்படும் என அச்சுறுத்தியுள்ளார்.

கருத்துகள் இல்லை: