சனி, 27 நவம்பர், 2010

போலி தாலிபான் கமாண்டரை பேச்சுவார்த்தை நடத்த அனுப்பியது

ஆப்கானிஸ்தான் அரசுடன் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தாலிபான் கமாண்டர் எனக்கூறி போலியான நபரை அனுப்பியவர்கள் பிரிட்டீஷ் அதிகாரிகள் என ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாயியின் பணிப் பிரிவுத் தலைவர் தெரிவித்துள்ளார்.

தாலிபானின் மூத்த தலைவரான முல்லா முஹம்மத் மன்சூர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இந்நபர் ஆப்கான் அதிகாரிகளுடன் பல முறை பேச்சுவார்த்தை நடத்தியதோடு ஆயிரக்கணக்கான டாலர் பணத்தை சுருட்டிச் சென்றுவிட்டார்.

இவர் பாகிஸ்தானின் குவாட்டா பகுதியில் கடை நடத்தும் நபராவார் என பின்னர் தெரியவந்தது.

பிரிட்டன் தூதரக அதிகாரிகள்தான் இவரை தாலிபான் கமாண்டர் எனக்கூறி கர்ஸாயிடம் அனுப்பியதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. ஆனால், இதனைக் குறித்து பதில் கூற பிரிட்டன் தூதரகம் மறுத்துவிட்டது.

அதேவேளையில் பிரிட்டன் உளவு நிறுவனமான எம்.ஐ6 தான் போலி தாலிபான் கமாண்டரை அனுப்பியதாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சார்ந்த அந்த நபரின் வாய்ஜாலத்தில் உளவுத்துறை அதிகாரிகள் வீழ்ந்துவிட்டார்கள் என கருதப்படுகிறது. தாலிபானுடன் சமரசம் சாத்தியமாக்கலாம் என வாக்குறுதி அளித்த இந்நபர் பணத்தை கைப்பற்றியுள்ளார். இவரைப் பற்றி விபரங்களை பரிசோதிப்பதில் அமெரிக்காவும் உதவியதாக கருதப்படுகிறது.

இச்சம்பவத்தில் ஏற்பட்ட அபத்தத்திற்கு பிரிட்டன் மட்டும் காரணமல்ல எனவும் மற்றவர்களுக்கும் இதில் பங்குண்டு என காந்தஹாரில் அமெரிக்க பிரதிநிதி பில் ஹாரிஸ் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை: