புதன், 8 டிசம்பர், 2010

ஈரானுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை

ஜெனீவா,டிச.8:சுவிட்சர்லாந்து தலைநகரான ஜெனீவாவில் உலக வல்லரசு நாடுகளுடனான ஈரானின் முதல் கட்ட பேச்சுவார்த்தை நிறைவுப்பெற்றது.

பேச்சுவார்த்தையின் அடுத்தக்கட்டம் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற இருக்கிறது. அணுசக்தித் தொடர்பான முக்கிய விஷயங்களில் பூரணமான பேச்சுவார்த்தை நடந்ததாக பேச்சுவார்த்தைக்கு தலைமை வகித்த ஐரோப்பிய யூனியனின் வெளியுறவுத்துறை தலைவர் பரோணஸ் ஆஷ்டன் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஒன்றும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது. ஐ.நா விதித்துள்ள தடையை நீக்க ஈரான் கோரிக்கை விடுத்தது. அடுத்த ஆண்டு ஜனவரி கடைசியில் நடைபெறவிருக்கும் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை சாதாரண விஷயங்களும், பரஸ்பர ஒத்துழைப்பும் நிகழ்ச்சி நிரலாக இருக்கும் என ஈரான் அதிகாரியை மேற்கோள்காட்டி பிரான்சு நாட்டு செய்தி நிறுவனம் கூறுகிறது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்சு, பிரிட்டன் ஆகியவற்றின் பிரதிநிதிகளும், ஜெர்மன் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

ஈரானின் பிரதிநிதியாக மூத்த அணுசக்தி மத்தியஸ்தர் ஸஈத் ஜலீல் பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்டார்.



கருத்துகள் இல்லை: