திங்கள், 3 மே, 2010

அணுபரவல் மாநாட்டில் ஈரான் பங்கேற்பதை தடுக்கும் உரிமை அமெரிக்காவுக்கில்லை

என்கிறது தெஹ்ரான்
செய்தியாளர்களிடம் பேசிய பின் ,அஹமெதி நெஜாத் அமெரிக்கா பயணமானார்

அணு பரவில் தடுப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்லும் ஈரான் உயர் மட்டக் குழுவிற்கு விசா மறுக்கப்பட்டதை ஈரான் வெளிநாட்டமைச்சர் மெளனாச்சர் மொடாகி கடுமையாகக் கண்டித்துள்ளார். இவ்விடயத்தில் முடிவெடுக்கும் உரிமை அமெரிக்காவுக்கு இல்லை.
ஈரானின் ஜனாதிபதி உட்பட எழுபது பிரதிநிதிகளுக்கும் விசா வழங்கப்பட வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டார். நியூயோர்க்கில் இன்று 03ம் திகதி முதல் 28ம் திகதி வரை அணு பரவல் தடுப்பு மாநாடு நடைபெறவுள்ளது.
192 நாடுகள் இதில் பங்கேற்கவுள்ளன. பேரழிவு ஆயுதங்களை (அணு ஆயுதம்) அழித்தொழித்து உலகில் அமைதியை நிலைப்படுத்தும் நோக்குடன் இம்மாநாடு நடைபெறுகிறது. இதில் ஈரான், கிழக்குத் திமோர் நாடுகள் பங்கேற்க விரும்பியபோதும் இந்நாடுகளின் பிரதிநிதிகளுக்கு இன்னும் விசா வழங்கப்படவில்லை.
இந்நிலையில் ஈரானிலிருந்து சிறு தொகை அதிகாரிகள் பங்கேற்க விசா வழங்கப்பட்டுள்ளதென அறிவித்துள்ள அமெரிக்க உயரதிகாரியொருவர் இதில் அஹ்மெதி நெஜாதும் உள்ளடக்க ப்பட்டுள்ளாரா எனத் தெரியவில்லை என்றார்.
அமெரிக்க காங்கிரஸ் (பாராளுமன்றம்) எம்.பிக்கள் அஹ்மெதி நெஜாத் அமெரிக்கா வருவதை நிராகரித்துள்ளனர். யுரேனியம் செறிவூட்டல் விடயம் தொடர்பாக மேற்குலக நாடுகளுடன் தொடர்ந்தும் அடம்பிடிக்கின்றது.
செறிவூட்டப்பட்ட யுரேனியத்தைச் சோதனையிட பிரான்ஸ், ரஷ்யாவுக்கு அனுப்ப மறுக்கும் ஈரான் இதை தங்கள் நாட்டுக்குள் வைத்து ஐ. நா. அதிகாரிகள் சோதனையிட முடியுமெனத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நியூயோர்க் மாநாட்டில் ஈரானின் உண்மைத்தன்மை சமாதான நோக்கம் என்பவற்றை உலகுக்கு விளக்க சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென ஈரான் வெளிநாட்டமைச்சர் வலியுறுத்தினார். இந்நிலையில் ஈரான் ஜனாதிபதி அமெரிக்காவும், இஸ்ரேலும் பயங்கரவாதச் செயல்களுளிலீடுபடுவதற்கான ஆதாரங்கள் தன்னிடமுள்ளதெனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் நீண்டகாலச் சர்ச்சைக்கு முடிவுகட்ட நியூயோர்க் மாநாட்டில் முடிவு எடுக்கப்படலாமெனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது. ஐ. நா. வும் ஈரானுக்கெதிராக நான்காவது தடைகளைக் கொண்டு வருவதற்கான இறுதி ஆயத்தங்களைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரியவருகிறது.
பிந்திய தகவலின்படி விசாக் கிடைக்கப்பெற்று நெஜாத் அமெரிக்கா புறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: