திங்கள், 3 மே, 2010

யெமனில் கடத்தப்பட்ட இராணுவ வீரர்களை விடுவிக்க அரசாங்கம் 48 மணிநேரக் காலக்கெடு

யெமன் இராணுவத்தினர் இருவரைக் கடத்திச் சென்றுள்ள தென்பகுதி போராளிகள் தங்கள் சகாக்களை விடுவிக்காவிட்டால் படையினரின் உயிருக்குத் தாங்கள் பொறுப்பில்லையென அறிவித்துள்ளனர். விடுமுறையில் சென்றுவிட்டு கடமைக்குத் திரும்பிய இரண்டு படைவீரர்களை யெமன் போராளிகள் கடத்திச் சென்றனர்.

இதையடுத்து யெமனின் தென்பகுதியிலுள்ள அமெரிக்கர்களைக் கவனமாக நடமாடுமாறு அமெரிக்கா கேட்டுள்ளது. யெமனிலுள்ள லண்டன் தூதரகத்தினை தாக்குவதற்கு அண்மையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்குள்ள மேற்கு நாட்டுப் பிரஜைகளை அவதானத்துடன் செயற்படுமாறு கேட்கப்பட்டுள்ளதுடன் வெளிநாட்டுப் பிரஜைகள் தங்கியுள்ள ஹோட்டல்களுக்கும் மேலதிக பாதுகாப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடத்தப்பட்ட இராணுவ வீரர்களை விடுதலை செய்ய 48 மணி நேரம் காலக்கெடுவை அரசாங்கம் விதித்துள்ளது.

அத்துடன் 48 பேரைத் தேடப்படுவோர் பட்டியலில் சேர்த்துள்ளது. இவர்கள் அனைவரும் யெமன் தென்பகுதியைச் சேர்ந்த போராளிகளாவர். யெமனின் தென்பகுதியில் 2004ம் ஆண்டு முதல் ஷியா முஸ்லிம்கள் மேலதிக அதிகாரம் வேண்டிப் போராடுகின்றனர்.

இதனால் பல பேர் உயிரிழந்தும் ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துமுள்ளனர். தற்போது இங்கு அல் கைதா ஊடுருவி தாக்குதல் திட்டங்களை முன்வைக்கிறது

கருத்துகள் இல்லை: