புதன், 5 மே, 2010

ரியாத்தில் கடும் சூறாவளிக் காற்றுடன் மழை- வரலாறு காணாத வெள்ளம்


சவூதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. வாகனப் போக்குவரத்து முடங்கி விட்டது. பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.
கடும் சூறாவளிக் காற்றுடன் நேற்று பெய்த மழையால் நகரமே வெள்ளக்காடாகியுள்ளது. பல சாலைகளில் வெள்ளம் போல மழை நீர் ஓடிவருவதால், போக்குவரத்து கடுமையாக ஸ்தம்பித்துள்ளது.
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரத்திற்கு கன மழை கொட்டித் தீர்த்தது. அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென் மேற்கிலிருந்து மணிக்கு 42 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் எனவும், மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சவூதி அரேபிய கல்வி அமைச்சர் இளவரசர் பைசல் பின் அப்துல்லா கூறுகையில், ரியாத்தில் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் மூடப்பட்டிருக்கும் என்று அறிவித்தார்.மேலும்,அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளும் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கு மழை வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட வாகனங்களை மீட்கும் நடவடிக்கைகளில் ரியாத் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. பாலங்களில் தேங்கியுள்ள நீரை அகற்றவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த கன மழையால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மழை காரணமாக பல்வேறு இடங்களிலிருந்து கிங் காலித் சர்வதேச விமான நிலையத்திற்கு பலரால் வர முடியாமல் போனதால் அவர்கள் விமானங்களைத் தவற விட நேரிட்டது.

நேற்று பிற்பகல் பள்ளியிலிருந்து திரும்பிய மாணவர்கள், மழை வெள்ளத்தால் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள். இதேபோல ரியாத் நகருக்கு விமானங்கள் மூலம் வந்தவர்களும் தங்களது இருப்பிடங்களுக்குச் செல்ல முடியாமல் பெரும் அவஸ்தைக்குள்ளானார்கள்.

கருத்துகள் இல்லை: