திங்கள், 3 மே, 2010

மேற்குலகத்தவர்கள் பலர் இஸ்லாத்தைக் கற்பதில் ஆர்வமாக உள்ளனர்

சர்வதேச குழு: இயற்கையுடன் தொடர்புடைய பல்வேறு வினாக்களுக்கு விடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான வழியாக, இஸ்லாத்தைக் கற்றுக் கொள்வதில் தற்போதைய பெரும்பாலான மேற்கத்தைய அறிஞர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பதை நவீன ஆய்வுகள் உறுதி செய்துள்ளதாக இஸ்லாமிய கல்வியியலாளர் ஒருவர் தெரிவிக்கின்றார்.

தமது சமூக, பொருளாதார பிரச்சினைகளுக்கெதிராகக் கிளர்ந்தெழும் வினாக்களுக்கு திருப்திகரமான விடைகளைப் பெற்றுக் கொள்வதில் அவர்களது கொள்கைகளும் கோட்பாடுகளும் தோல்வி கண்டுள்ளமையால், அவர்களிடையே இஸ்லாம் பற்றிய ஆர்வம் அதிகரித்து வருகின்றது என, இஸ்லாமிய சிந்தனைக்கான சர்வதேச நிறுவனத்தின் பணிப்பாளர் முஹம்மத் சித்தீக் தெரிவித்தார்.

இஸ்லாமிய அறிவியலும் கல்வி மறுசீராக்கமும் பற்றிய சர்வதேச கருத்தரங்கொன்றில் உரையாற்றும் போது, சித்தீக் தொடர்ந்து தெரிவித்ததாவது, மேற்குலகத்தினர், ஆய்வுகளுக்கும் அபிவிருத்திக்கும் பயன்படுத்திய அனைத்து விஞ்ஞானக் கற்கைகளும் பொதுப் பிரயோகத்தில் முழுமையான பயன்பாடற்றவை என்பதை உணர்ந்து கொண்டுள்ளனர்.

குர்ஆனும் பைபிளும் எனும் தலைப்பில் நூலொன்றை எழுதியவரான பிரான்சிய விஞ்ஞானியொருவர், குர்ஆன் மாத்திரமே இயற்கையுடன் தொடர்புடைய அனைத்து விவகாரங்களுக்குமான பதில்களைக் கொண்டுள்ளது எனத் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உண்மையில், இதன்காரணமாகவே மேற்குலக விஞ்ஞானிகள் பலர் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டிருக்கின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.

சித்தீக்கின் தகவலின்படி, இஸ்லாம் மேற்குலகில் மிக வேகமாகப் பரவி வருகின்றது. அமெரிக்காவில், பள்ளிவாயல்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. யதார்த்தத்தை விளங்கிக் கொண்டமையினால் பல அமெரிக்கர்களும் இஸ்லாத்தைத் தழுவிக் கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: