வியாழன், 24 பிப்ரவரி, 2011

யெமனில் ஏழு எம்.பிக்கள் அதிபரின் கட்சியை விட்டு விலகினர்


யெமன் நாட்டின் ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக மக்கள் எழுச்சி கொளுந்துவிட்டு எரிந்துக் கொண்டிருக்கும் வேளையில் அரசின் நடவடிக்கையை கண்டித்து ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேர் கட்சியிலிருந்து ராஜினாமாச் செய்துள்ளனர். இத்துடன் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் கட்சியிலிருந்து விலகும் எம்.பிக்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது.


எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அடக்கி ஒடுக்கும் அரசு நடவடிக்கையைக் கண்டித்து எம்.பிக்கள் ஆளுங்கட்சியிலிருந்து ராஜினாமாச் செய்துள்ளனர்.

அரசுக்கெதிராக பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய பேரணியில் அரசு கைக்கூலிகள் தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச் சூட்டில் 2 மாணவர்கள் மரணமடைந்துள்ளனர். ஏராளமானோருக்கு காயமேற்பட்டுள்ளது. துப்பாக்கியும், கற்களையும் பயன்படுத்தி அரசு கைக்கூலிகள் பேரணியில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

நேற்று ஸாலிஹின் மாளிகைக்கு அருகில் போராட்டம் நடத்தவந்த 4000க்கும் மேற்பட்ட மக்கள் போலீஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். ஸன்ஆ பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நகரத்தின் சிறப்பு கூடாரங்களில் தங்கியுள்ளனர்.

யெமனின் இரண்டாவது பெரிய நகரமான தைஸில் ஸாலிஹின் ராஜினாமாவைக் கோரி பல்லாயிரக்கணக்கானோர் பேரணி நடத்தினர். நகரத்தின் ஸஹீர் சதுக்கத்திற்கு சுதந்திர சதுக்கம் என பெயர் சூட்டி கடந்த ஒருவார காலமாக மக்கள் இங்கு தங்கியுள்ளனர்.

போராட்டத்தைத் தொடர்ந்து சில நகரங்களில் பள்ளிக்கூடங்களும், அரசு அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன.

அதேவேளையில், தான் ராஜினாமாச் செய்யப்போவதில்லை எனவும், மக்களின் எல்லை மீறிய உணர்வின் வெளிப்பாடுகள் தேசத்தில் அராஜகத்தையும், கொலைகளையும் அதிகரிக்கும் என ஸாலிஹ் மிரட்டல் விடுத்துள்ளார்

கருத்துகள் இல்லை: