வியாழன், 10 பிப்ரவரி, 2011

மிரட்டும் சுலைமான், அடம் பிடிக்கும் முபாரக், அசராத மக்கள்


கெய்ரோ,பிப்:எகிப்து சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் பதவி விலகக்கோரி அந்நாட்டு மக்கள் நடத்திவரும் எழுச்சிமிகு போராட்டம் 16-வது நாளை தாண்டிவிட்டது. ஆனால், பதவியை விட்டு விலகாமல் அடம்பிடித்து வருகிறார் ஹுஸ்னி முபாரக். எகிப்தின் முக்கிய எதிர்கட்சியான முஸ்லிம் சகோதரத்துவ இயக்கம் முபாரக் பதவி விலகியே தீரவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.



இந்நிலையில் அந்நாட்டு துணை அதிபராக நியமிக்கப்பட்டிருக்கும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நண்பனான உமர் சுலைமான், ராணுவ புரட்சி ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளிருப்பதாக மறைமுகமாக மிரட்டியுள்ளார்.



மக்களின் எழுச்சியை எப்படியாவது அடக்கிவிடலாம் என கக்கணங்கட்டிக் கொண்டு செயல்பட்டு வரும் உமர் சுலைமான் எதிர்கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்புவிடுத்துள்ளார். மேலும் மக்களின் எழுச்சிப் போராட்டம் தொடருமானால் புரட்சி ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும், இது நாட்டின் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் எனவும் மிரட்டும்

தொனியில் கூறியுள்ளார்.



புரட்சி ஏற்படும் சாத்தியம் என உமர் சுலைமான் கூறியிருப்பது ராணுவப் புரட்சியைத்தான் அதாவது, மக்கள் எழுச்சியை அடக்கி ஒடுக்க ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் என்பதைத்தான் மறைமுகமாக குறிப்பிட்டுள்ளார் என கருதப்படுகிறது.



எகிப்தில் நடந்துவரும் வெகுஜன எழுச்சிப் போராட்டம் 16-வது நாளை தாண்டிவிட்டது. நாடுதழுவிய அளவில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தொழிலாளர் அமைப்புகளெல்லாம் இப்போராட்டத்தில் கலந்துக்கொண்டு தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன. 'முபாரக் வெளியேறும் வரை நாங்கள் வெளியேறமாட்டோம்' என்ற உறுதியுடன் பொதுமக்கள் எழுச்சிப் போராட்டத்தில் கலந்துள்ளனர்.



முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவரான முஹம்மது முர்ஸி கூறியதாவது: "முபாரக் பதவி விலகியே தீரவேண்டும். புதிய சகாப்தம் துவங்கப் போகிறது. எங்கள் இயக்கம் வெளிப்படையாக அரசுடன் பேச தயாராக இருக்கிறது. சிலர் இந்த பேச்சுவார்த்தையை தனிப்பட்ட ரீதியாக கருதுகிறார்கள். நாங்கள் பெரும்பான்மையில்லை. மாறாக எகிப்திய மக்களுடன் நாங்கள் பெரும்பான்மையாக இருக்கிறோம் ("We are with the majority of the Egyptian people... We are not the majority."). இந்த அரசு தோற்றுவிட்டது. நாங்கள் மக்களின் உறுதிக்கு ஆதரவாக இருக்கிறோம்." இவ்வாறு முர்ஸி தெரிவித்துள்ளார்.



முபாரக் வெளியேறும் வரை எவ்வித பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் தயாரில்லை. அவர் வெளியேறிய பிறகு அனைத்துப் பிரச்சனைகளைக் குறித்தும் பேசலாம் என எஸ்ஸாம் மக்தி என்ற 35 வயது வழக்கறிஞர் தெரிவிக்கிறார். இவர் கடந்த ஜனவரி 28-ஆம் தேதியிலிருந்து போராட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார். இரவில் ராணுவ டாங்கின் அடியில்தான் தூங்குகிறார். இவரைப்போல ஆயிரக்கணக்கான மக்கள் கடுங்குளிரையும் தாங்கிக்கொண்டு இரவு நேரங்களில் தஹ்ரீர் சதுக்கத்தில் ராணுவ டாங்குகளின் அடியில்தான் தூங்குகின்றனர்.



"தளர்ந்துவிடாதீர்கள். சோர்ந்துவிடாதீர்கள். சுதந்திரம் இலவசமாக கிடைக்காது" என பேச்சாளர்கள் மக்களுக்கு எழுச்சியூட்டுகின்றனர்.



லண்டன்,பிப்.10:மக்கள் எழுச்சியை எதிர்கொள்ள எகிப்து சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கினால் நியமிக்கப்பட்டவர் துணை அதிபர் உமர் சுலைமான். இவர் தினமும் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை ரகசிய தொலைபேசி ஹாட்லைன் மூலமாக தொடர்புக்கொண்டு எகிப்தின் நிலைமைகள் குறித்து விவாதிப்பதாக லண்டன் டெலிகிராஃப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.



விக்கிலீக்ஸ் டெலிகிராஃபிற்கு அளித்த தகவல்களின்படி 2008 ஆம் ஆண்டே உமர்சுலைமான் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நம்பிக்கைக்குரியவராக மாறிவிட்டார் எனத் தெரியவந்தது.



முபாரக் நோயின் காரணமாக பதவி விலக நிர்பந்தம் ஏற்படும்பொழுது உமர்சுலைமான் எகிப்தின் அதிபராக வருவதுதான் நல்லது என 2008 ஆம் ஆண்டே இஸ்ரேல் பாதுகாப்புத்துறையின் ஆலோசகர் டேவிட் ஹாக்கம் தெரிவித்ததை விக்கிலீக்ஸ் வெளியிட்டிருந்தது.



ஹமாஸ் காஸ்ஸாவிற்குள் ஆயுதங்களை கடத்துவதை தடுப்பதற்கு எகிப்தின் மீது நிர்பந்தம் ஏற்பட்டபொழுது உமர் சுலைமானும், தரைப்படை ராணுவத்தளபதி தன்தாவியும் 'இஸ்ரேலின் தாக்குதலை' வரவேற்ற செய்தியையும். டெலிகிராஃப் வெளியிட்டுள்ளது.



'ஹமாஸ் தனிமைப்படுத்தப்பட வேண்டும். காஸ்ஸாவில் வாழும் மக்கள் பசியுடன் வாழவேண்டும் ஆனால் பட்டினி கிடக்கூடாது’ ("go hungry but not starve".) என உமர் சுலைமான் ஒரு முறை கூறியுள்ளதாக டெலிகிராஃப் கூறுகிறது.

புரட்சிக்கனல் பற்றி எரியும் தஹ்ரீர் சதுக்கம் - சர்வதேச சமூகத்தால் கெய்ரோ,பிப்.10:சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் முப்பது ஆண்டுகால அடக்குமுறை ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்தே தீருவோம் என்ற உறுதியுடன் களமிறங்கியுள்ள எகிப்து நாட்டு மக்களின் எழுச்சிப் போராட்டம் 17-வது நாளை எட்டிய நிலையில் கெய்ரோவின் தஹ்ரீர் சதுக்கம்(சுதந்திர சதுக்கம்) அரபுலக புரட்சியின் அடையாளமாகவும், இதயத் துடிப்பாகவும் மாறிவிட்டது. எகிப்து நாட்டின் தலைநகரான கெய்ரோவின் பொது இடமான தஹ்ரீர் சதுக்கத்தில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் மக்கள் எழுச்சிப் போராட்டத்தை சர்வதேச ஊடகங்களோ, நாடுகளோ புறக்கணிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.



சமூகத்தின் பங்கேற்கும் இந்த மக்கள் எழுச்சியில் முன்னிலைப்படுத்த எந்த தலைவரும் இல்லையென்றாலும் எல்லா காரியங்களும் முறையாக நடந்துவருகிறது. புதிய தலைவர்கள் உருவாகி வருகின்றார்கள். கமிட்டிகள் உருவாகின்றன. சுயமாக தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்கின்றார்கள்.



55 ஆயிரம் சதுர அடி பரப்பளவைக் கொண்ட தஹ்ரீர் சதுக்கத்தில் பொருளாதார-பாதுகாப்பு ஏற்பாடுகளில் முற்றிலும் ஒழுங்குமுறை இல்லை. தஹ்ரீர் சதுக்கத்தைச் சுற்றிலும் கற்கள்,மணல், கட்டிட சிதிலங்கள் ஆகியவற்றால் தடுப்புகளை ஏற்படுத்தி 26 லிருந்து 40 வயது வரையிலான எகிப்திய இளைஞர்கள் பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.



அடையாள அட்டையும், பரிசோதனையும் இல்லாமல் எவருக்கும் அனுமதியில்லை. உடல் பரிசோதனை நடத்தி ஆயுதங்கள் எதுவுமில்லை என்பதை உறுதிச்செய்த பிறகே உள்ளேச் செல்லமுடியும்.



பாதுகாப்பு பொறுப்பை மேற்கொள்ளும் நபர்களை அடையாளங்காண தனியாக பாட்ஜ் வழங்கப்பட்டுள்ளது. ராணுவம் இளைஞர்களுடன் ஒத்துழைக்கின்றார்கள். பெரும்பாலும் ராணுவம் பார்வையாளர்களாகவே உள்ளனர்.



பத்திரிகையாளர்களுக்கு மீடியா கோ-ஆர்டினேட்டருடன் தொடர்புக் கொள்ளவும், போலீசார் மற்றும் அரசுக்கு ஆதரவான பல்தாகியா(குண்டர்கள்)க்களின் தொந்தரவுகளைக் குறித்து சர்வதேச அமைப்புகளிடம் புகார் அளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.



தேநீர், எகிப்திய பலகாரங்கள் விற்கும் சாலையோர கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பணமிருந்தால் வாங்கி சாப்பிடலாம். பணமில்லாதவர்களுக்கு உணவு வழங்க இளைஞர்கள் நிதியை திரட்டி அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுக்கின்றனர். மருந்துகள் மற்றும் துணிகள் ஆகியன இவர்கள் வழங்கி வருகின்றார்கள்.



மக்கள் எழுச்சியின் கொந்தளிப்பின் வேளையில் அதிகாரிகளின் துப்பாக்கிச்சூட்டில் இறந்துபோன உயிர்தியாகிகளின் படங்களுடனான பெரிய பேனர்களை தஹ்ரீர் சதுக்கத்தின் சுற்றிலும் காண முடிகிறது.



அடிக்கடி உத்வேக மூட்டும் வகையில் புரட்சி கீதங்கள் பாடப்படுகின்றன. கோஷங்கள் முழங்கப்படுகின்றன. அத்தியாவசியப் பொருட்களை எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு கொண்டுசெல்வதை முபாரக்கின் ஆதரவாளர்கள் தடுத்தபோதிலும் அவற்றையெல்லாம் எதிர்கொள்வதற்கான யுக்திகளையும் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் வரையறுத்துள்ளார்கள்.



சதுக்கத்தின் மத்தியில் அமைந்திருக்கும் மேடையில் சிறந்த ஒலிபெருக்கி வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கலைஞர்கள் மக்கள் எழுச்சிக்கு உத்வேகமூட்டும் வகையில் பல நிகழ்ச்சிகளை மேடையில் நடத்துகின்றனர். மொபைல், லேப்டாப் ஆகியவற்றை ரீசார்ஜ் செய்ய வசதிகள் செய்யப்பட்டுள்ளன.



முபாரக் என்ற சர்வாதிகாரியிடமிருந்து எகிப்தை காப்பாற்றுவதற்காக அந்நாட்டு மக்கள் சுயமாக தலைவர்களாகவும், தொண்டர்களாகவும் மாறிவிட்டனர். இருப்பதை பகிர்ந்து கொண்டு தங்களின் கண்ணியத்தையும், உரிமைகளையும் மீட்டெடுப்பதற்கான முயற்சியில் எகிப்திய மக்கள் ஈடுபட்டுள்ளனர்.

கெய்ரோ,பிப்.10:பதினாறாவது நாளை கடந்துவிட்ட எகிப்தின் மக்கள் எழுச்சிப்போராட்டம் புதிய கட்டத்தை அடைந்துள்ளது.



நாளை வெள்ளிக்கிழமை மிகப் பிரம்மாண்ட பேரணி எகிப்தின் சர்வாதிகார அதிபர் ஹுஸ்னி முபாரக்கின் மாளிகையை நோக்கி நடத்தப்படும் என எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் அறிவித்துள்ளனர்.



பிப்ரவரி 4-ஆம் நாளை முபாரக் 'விடைபெறும் நாளாகவும்', பிப்ரவரி 13-ஆம் நாளை 'உயிர்தியாகிகளின் தினமாகவும்' எகிப்து நாட்டு மக்கள் கடைபிடித்தனர். அந்நிகழ்ச்சிகளிலெல்லாம் மக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர். நேற்று பெருமளவிலான மக்கள் மக்கள் எழுச்சியின் அதிகாரப்பூர்வ மையமாக விளங்கும் தஹ்ரீர் சதுக்கத்தில் கூடியிருந்தனர்.



புதியதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் அஹ்மத் ஷஃபீக் அவரது அலுவலகத்தில் நுழைவதை தடுப்பதற்கு ஐம்பதினாயிரம் மக்கள் திரண்டிருந்தனர்.



நேற்று முன்தினம் பாராளுமன்றம் மற்றும் உள்துறை அமைச்சகத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற பேரணிகள் நடைபெற்றன. மக்கள் வசிக்கும் தற்காலிக கூடாரங்களால் தஹ்ரீர் சதுக்கம் நிரம்பியுள்ளதாக அல்ஜஸீரா தெரிவிக்கிறது.



வெளிநாட்டில் வசிக்கும் எகிப்து நாட்டு மக்கள் புரட்சிப் போராட்டத்தில் பங்கேற்பதற்காக எகிப்து வருகைத் தருகின்றனர். இணையதளத்தில் இதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



எகிப்தின் இரண்டாவது பெரிய நகரமான அலெக்ஸாண்ட்ரியாவில் மக்கள் பெருமளவில் அணி திரண்டுள்ளனர். தொழிலாளர் அமைப்புகள் இன்று வேலை நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளன.

கருத்துகள் இல்லை: