சனி, 13 நவம்பர், 2010

ஈராக்கின் புதிய அரசு உருவாக்கம்: கட்சிகள் சம்மதம்

 பாக்தாத்,நவ.12:தேர்தல் முடிவடைந்து 8 மாதங்கள் கழித்து புதிய அரசை உருவாக்க ஈராக் அரசியல் கட்சிகள் ஒப்பந்தம் மேற்கொண்டன.

ஷியா பிரிவு தலைவரான நூரி அல் மாலிகி பிரதமராக தொடர்வார். சுன்னி பிரிவினருக்கு சபாநாயகர் பதவி வழங்கப்படும். சுன்னி தலைவர் இயாத் அல்லாவி தேசிய கொள்கை வகுக்கும் கமிட்டியின் தலைவராக பதவி வகிப்பார். அதிபராக குர்து இனத்தைச் சார்ந்தவர் பதவி ஏற்பார். இந்த ஒப்பந்தம் ஈராக் மக்களின் வெற்றி எனக்கூறிய பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தராக பணியாற்றிய குர்துகளின் உள்ளூர் தலைவரான மஸ்ஊத் பர்ஸானி இறைவனுக்கு நன்றி தெரிவித்தார்.

முன்னாள் பிரதமரும் சுன்னி பிரிவு தலைவருமான அல்லாவியின் ஆதரவு கிடைத்தது மூலம் நூரி அல் மாலிக்கிக்கு பிரதமராக தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏதேனும் பிரிவு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்கின்றதா? திருப்தியாக உள்ளதா? என்பதை பரிசோதிக்கவும் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒப்பந்தம் அனுமதியளித்துள்ளது.

குர்து தலைவரும் தற்போதைய அதிபரான ஜலால் தலபானி அதே பதவியில் தொடர்வார் எனத் தெரிகிறது. சபாநாயகரையும், துணை சபாநாயகரையும் பாராளுமன்றம் கூடி தேர்ந்தெடுக்கும். அமைச்சரவை உறுப்பினர்களை தீர்மானிக்க ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அரசு உருவாக்கத்தில் ஈரான் முக்கிய பங்கு வகித்ததாக மாலிக்கியின் எதிராளிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். பாராளுமன்றத்தில் 40 இடங்களைக் கொண்ட ஷியா போராளி பிரிவு தலைவர் முக்ததா அல்ஸத்ர் அரசு உருவாக மாலிக்கியை ஆதரிப்பதாக கடந்த மாதம் இறுதியில் அறிவித்ததைத் தொடர்ந்து அரசு உருவாக்கம் எளிதானது

கருத்துகள் இல்லை: