செவ்வாய், 30 நவம்பர், 2010

விக்கிலீக்ஸ்:அஜன்ஜாவுக்கு எதிராக உளவுவேலைப் பார்த்ததாக வழக்கு தொடர அமெரிக்கா முடிவு

வாஷிங்டன்,டிச.1:சட்டவிரோதமாக அரசு ரகசிய ஆவணங்களை வெளியிட்டதன் பேரில் விக்கிலீக்ஸ் இணையதள ஸ்தாபகர் ஜூலியன் அஸன்ஜாவுக்கு எதிராக உளவுவேலைப் பார்த்ததாக வழக்கு தொடர அமெரிக்கா முடிவுச் செய்துள்ளது.

ரகசிய தகவல்களை வெளியிட்டதன் மூலம் அஸன்ஜா ஏதாவது குற்றவியல் சட்டங்களை மீறியுள்ளாரா என்பதுக் குறித்து ஆராய்ந்து வருவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்ததாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

ரகசிய ஆவணங்களை கைவசம் வைத்திருக்கும் நபர்களைக் குறித்தும், அவற்றை விக்கிலீக்ஸிற்கு அளித்தவர்கள் குறித்த விபரங்களை எஃப்.பி.ஐ சேகரித்து வருகிறது. விக்கிலீக்ஸின் விளக்கங்கள் குறித்தும் விசாரணை நடந்துவருகிறது.

பெண்டகனின் தலைமையில்தான் இவ்விசாரணை நடைப்பெற்று வருகிறது. ராணுவ-சிவிலியன் சட்டங்களை மீறிய குற்றம் அஸன்ஜா மீது சுமத்தப்படுமா என்பதுக் குறித்து தெரியவில்லை.

இவ்வருட துவக்கத்தில் கைதுச் செய்யப்பட்டு விசாரணையை எதிர்கொண்டிருக்கும் அமெரிக்க ராணுவ உளவுத்துறை பகுப்பாய்வாளர் பிராட்லி மானிங் விக்கிலீக்ஸிற்கு ரகசிய ஆவணங்களை அளித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

அமெரிக்க உளவுத்துறை சட்டப்படி தேசிய பாதுகாப்புத் தொடர்பான விபரங்களை சட்டத்துக்கு புறம்பாக கைவசம் வைத்திருப்பதும் அது தேசத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துமானால் அந்த நபர் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்.

ரகசிய விபரங்களை திருடுவதும் அதனை வெளியிடுவதும் குற்றச்செயல் என வெள்ளைமாளிகை ஊடக செயலாளர் ராபர்ட் கிப்ஸ் தெரிவிக்கிறார்.

விக்கிலீக்ஸ் வெளியிட்ட ரகசிய ஆவணங்கள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும், அதன் முடிவை தற்போது தெரிவிக்க இயலாது எனவும் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் தெரிவிக்கிறார்.

ரகசிய தகவல்களை திருடியவர்களை கடுமையாக தண்டிப்போம் என அமெரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் கூறுகிறார். எதிர்காலத்தில் இத்தகையதொரு சம்பவம் நிகழாமலிருக்க பாதுகாப்புத்துறையிலும் வெளியுறவுத்துறையிலும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்குவோம் என ஹிலாரி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: