திங்கள், 31 ஜனவரி, 2011

அல் பராதியை எகிப்தின் தலைவராக முன்னிறுத்தும் பணியை அமெரிக்கா செய்து வருவதாகவும் ஈரான் கூறியுள்ளது.

எகிப்தின் அதிபராக கடந்த 30 ஆண்டுகளாகப் பதவி வகித்து வரும் ஹோஸ்னி முபாரக் பதவி விலகக் கோரி நடைபெற்று வரும் மக்கள் புரட்சி 7ஆம் நாளாகத் தொடர்கிறது.

எகிப்தில் நிலவி வரும் வேலை வாய்ப்பின்மை மற்றும் ஏழ்மையால் அதிருப்தியில் இருந்த மக்கள் அண்டை நாடான துனீசியாவில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து வீதிக்கு வந்து போராட்டத்தில் குதித்தனர். கடந்த 24 ஆம் தேதி ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிராக ஆரம்பித்த இந்த மக்கள் புரட்சி, இன்றும் ஏழாவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

போராட்டம் வலுக்க ஆரம்பித்த உடன், அமைச்சரவையைக் கலைத்த ஹோஸ்னி முபாரக், தனக்கு நெருக்கமான முன்னாள் இராணுவ அமைச்சர் மூன் அஹ்மத் ஷபீஃக்கைப் பிரதமராகவும் உளவுத்துறை தலைவர் உமர் சுலைமானை துணை அதிபராகவும் நியமித்து உத்தரவிட்டார். இதனை ஏற்றுக்கொள்ளாத மக்கள், ஹோஸ்னி முபாரக் பதவி விலகுவது மட்டுமே தங்களின் போராட்டத்திற்கு முடிவு ஏற்படுத்தும் என்று ஒற்றை குரலில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஹோஸ்னி முபாரக்கிற்கு எதிரான இப்புரட்சிக்கு, உலகெங்கிலுமுள்ள எகிப்தியர்கள் தங்கள் உறுதியான ஆதரவைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்காவிலுள்ள எகிப்தியர்கள் மிகப்பெரும் பேரணியொன்றை எகிப்து புரட்சிக்கு ஆதரவாக நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், எகிப்தில் நடக்கும் சம்பவங்களை உடனுக்குடன் உலக மக்கள் முன் கொண்டு சென்று கொண்டிருந்த அல் ஜஸீரா தொலைகாட்சி அலைவரிசைக்கு எகிப்து தடை விதித்துள்ளது. அல் ஜஸீராவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் விலக்குவதாகவும் அல் ஜஸீரா செய்தியாளர்களுக்கு வழங்கிய செய்தியாளர் உரிம அட்டைகளைத் திரும்ப பெறுவதாகவும் எகிப்து அரசு அறிவித்துள்ளது.

எகிப்து மக்கள் புரட்சி 7ஆம் நாள் நிகழ்வின் சில துளிகள் வருமாறு:

* கெய்ரோவின் மையப் பகுதியில் உள்ள தஹ்ரீர் ஸ்கொயர் என்ற இடத்தில் கூடி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

* செவ்வாய்க் கிழமையன்று(01/02/2011) எகிப்து முழுவதும் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

* அரபி மற்றும் ஆங்கிலத் தொலைக்காட்சியான அல் ஜஸீராவின் ஒளிபரப்பிற்கு எகிப்திய அரசு தடை விதித்துள்ளது.

* அல்ஜஸீரா தொலைக்காட்சியின் ஒளிபரப்புக் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன் 5 செய்தியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

* எகிப்திய நாடாளுமன்றத்தைக் கலைக்க வேண்டும் என முக்கிய எதிர்கட்சியனா இக்வானுல் முஸ்லிமீன் கட்சி கோரியுள்ளது.

* துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறைச் சம்பவங்களில் பலியானோரின் எண்ணிக்கை 150ஆக உயர்ந்துள்ளது.

* வெளிநாட்டு விமானங்கள் தங்கள் நாட்டினரை அழைத்துச் செல்ல ஒரு சேரக் குவிந்துள்ளதால் கெய்ரோ விமான நிலையம் நிரம்பி வழிகிறது.

* சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை எகிப்து அரசு கைது செய்துள்ளது.

* இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் செல்லுபடியாகுமா என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என நாடாளுமன்ற சபாநாயகர் அறிவித்துள்ளார்.

* தன்னுடைய அமைச்சரவையில் மேலும் பல மாற்றங்களைச் செய்து ஹோஸ்னி முபாரக் விரைவில் அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* எகிப்தின் தற்போதைய நிகழ்வுகள் 1979ஆம் ஆண்டு ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமியப் புரட்சியை நினைவூட்டுவதாகவும் ஆனால் ஐநா சபையின் அணு ஆயுதக் கண்காணிப்பாளராக இருந்த முஹம்மது அல் பராதியை எகிப்தின் தலைவராக முன்னிறுத்தும் பணியை அமெரிக்கா செய்து வருவதாகவும் ஈரான் கூறியுள்ளது.

* எகிப்திய அதிபர் ஹோஸ்னி முபாரக்குக்கு இஸ்ரேல் தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துள்ளது.

ஹுஸ்னி முபாரக்கிற்கு இஸ்ரேல் ஆதரவு

,பிப்.1:எகிப்து நாட்டு அதிபர் ஹுஸ்னி முபாரக்கை அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் விமர்சனம் செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென இஸ்ரேல் கூறியுள்ளது.

எகிப்திலும், மேற்காசியாவிலும் ஸ்திரத்தன்மை(?)யை நிலைநாட்டுவதில் முபாரக்கை ஆதரிப்பது அவசியம் என இஸ்ரேல் கூறியுள்ளது.

இதுத்தொடர்பாக அழுத்தம் கொடுப்பதற்கு முக்கிய நாடுகளில் தங்களின் தூதரக பிரதிநிதிகளுக்கு அவசர செய்தி அனுப்பப்பட்டுள்ளதாக ஹாரட்ஸ் பத்திரிகை கூறுகிறது.

ஆட்சியில் சீர்திருத்தம் மேற்கொள்ளாததை காரணங்காட்டி முபாரக்கை மேற்கத்திய நாடுகள் விமர்சித்திருந்தன. இதனால் நெருக்கடியான காலக்கட்டத்தில் முபாரக் தனிமைப்படுத்தப்பட்டார்.

அமெரிக்காவின் உற்ற தோழனான முபாரக் இஸ்ரேலுக்கும் நெருக்கமானவர்தான். காஸ்ஸாவின் மீது தடை ஏற்படுத்தும் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எல்லாவித ஒத்துழைப்பையும் அளித்தவர் முபாரக்.

எகிப்தில் ஏற்பட்டுள்ள மக்கள் திரள் போராட்டம் ஆட்சி மாற்றத்திற்கு காரணமானால் அது தங்களையும் பாதிக்கும் என இஸ்ரேல் அஞ்சுகிறது. எகிப்தின் நிலைமைகளைக் குறித்து மதிப்பீடுச்செய்ய இஸ்ரேலின் ராணுவ தலைமை அவசரக் கூட்டத்தை கூட்டியது. முபாரக்கின் ஆட்சி கவிழ்ந்தால் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து பல மணிநேரம் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

எகிப்தின் நிலைமைகள் குறித்து நாங்கள் கவலையுடன் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகளாக இஸ்ரேலின் கூட்டாளியான முபாரக்கை இழந்து விடுவோமா? என இஸ்ரேல் கவலையில் உள்ளது. எகிப்திலிருந்து காஸ்ஸாவிற்கு செல்லும் எல்லைப் பகுதிகளில் கட்டுப்பாடு பல இடங்களிலும் சீர்குலைந்துவிட்டது. ஹமாஸ் இயக்கம் இவ்வழிகள் மூலம் ஆயுதங்களை கடத்துவதற்கான வாய்ப்புகளைக் குறித்தும், எகிப்து நாட்டு சிறையிலிருந்து வெளியேறிய ஹமாஸ் போராளிகள் காஸ்ஸாவிற்குள் நுழைவதற்கான வாய்ப்புகளும் இஸ்ரேலின் தூக்கத்தை கெடுத்துள்ளன.

கருத்துகள் இல்லை: