ஞாயிறு, 30 ஜனவரி, 2011

எகிப்தில் சர்வாதிகார அரசுக்கெதிரான மக்கள் திரள் போராட்டம்

ஆட்சிமாற்றத்தை கோரி ஊரடங்கு உத்தரவை மீறியும்,பாதுகாப்புப் படையினருக்கு சவால் விட்டும் ஆறாவது நாளாக களமிறங்கிய எகிப்து நாட்டு மக்கள் கெய்ரோவின் கட்டுப்பாட்டை தங்கள் வசம் கொண்டுவந்துள்ளனர்.

ராணுவ உடையை களைந்துவிட்டு ராணுவ வீரர்களும் மக்களோடு போராட்டத்தில் கலந்துகொண்டனர். போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கு இடையே நடந்த மோதலில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 150 ஐ தாண்டியுள்ளது. நான்காயிரத்திற்கும் அதிகமானோருக்கு காயமேற்பட்டுள்ளது. போலீஸ் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்திய வேளையிலும் மக்கள் அதனைப் பொருட்படுத்தவில்லை.


சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் 30 ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பாமல் திரும்பமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் பிரகடனப்படுத்தியுள்ளனர்.

எகிப்து வன்முறைக்காடாக மாறியுள்ளது. போலீஸ் பாதுகாப்பு இல்லாததன் காரணத்தினால் வங்கிகளும், நகைக்கடைகளும், பெரும் வியாபார நிறுவனங்களும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

போராட்டம் வலுவடைந்த பொழுதிலும் பதவியை விட்டு விலக விரும்பாத ஹுஸ்னி முபாரக் ராணுவத்தின் சக்தியை காண்பிப்பதற்கான முடிவில் இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கெய்ரோ நகரத்தில் ராணுவ விமானங்களும், ஹெலிகாப்டர்களும் தாழ்வாக பறக்கின்றன. போர் டாங்குகள் அணி வகுத்துள்ளன. ஆனால் இதுவரை தாக்குதல் துவங்கவில்லை.

நாட்டின் பல்வேறு சிறைகளை போராட்டக்காரர்கள் தகர்த்தனர். வாதினா ட்ரவுன் சிறையில் சிறை அதிகாரிகள் வேலையை ராஜினாமாச் செய்ததைத் தொடர்ந்து இஃக்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தைச் சார்ந்த 34 தலைவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

கெய்ரோவில் மூத்த போலீஸ் அதிகாரியை கொலைச் செய்துவிட்டு ஆயிரத்திற்கும் அதிகமானோர் சிறையிலிருந்து வெளியேறினர். நூற்றுக்கணக்கான நீதிபதிகள் போராட்டகாரர்களுடன் இணைந்துள்ளனர்.

முபாரக் பதவி விலகவேண்டுமென நோபல் பரிசுப்பெற்ற முஹம்மது அல்பராதி வலியுறுத்தியுள்ளார்

எகிப்து:உமர் சுலைமான் அமெரிக்காவின் உறவினர்

மக்கள் திரள் போராட்டத்தை எதிர்கொள்வதற்காக எகிப்து சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கால் நியமிக்கப்பட்ட துணை அதிபர் உமர் சுலைமான் அமெரிக்காவிற்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

தனது 30 ஆண்டுகால சர்வாதிகார ஆட்சியில் முதன்முறையாக முபாரக் தனக்கு ஒரு உதவியாளரை நியமித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எகிப்து நாட்டின் வெளிநாட்டு உளவு பிரிவின் தலைவரும், மேற்காசிய சமாதான பேச்சுவார்த்தையில் எகிப்து நாட்டின் தூதராக பணியாற்றிய சுலைமான் முபாரக்கின் நம்பிக்கைக்குரிய தோழராவார்.

முபாரக் பதவி விலகுவதன் அறிகுறியாக உமர் சுலைமானின் நியமனம் கருதப்படுகிறது. மக்களின் விருப்பங்களை விட அரசு மற்றும் ராணுவத்தின் விருப்பத்தின் அடிப்படையில்தான் உமர் சுலைமன் துணை அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். அரசியல் சட்டத்தின் படி செல்லத்தக்க வகையில் ராணுவத்தின் தலைமையிலான ஆட்சியை தொடர்வதன் திட்டம்தான் இது என மின்னஸோட்டா பல்கலைக்கழக பேராசிரியர் ராக்வி ஆஸாத் கூறுகிறார். ராணுவத்துடனான சமரசத்தின் ஒரு பகுதி இது என அவர் தெரிவிக்கிறார்.

உமர் சுலைமானை துணை அதிபராக நியமித்தது மக்களின் கோபத்தை தூண்டியுள்ளது. முபாரக்குடன் சுலைமானையும் எதிர்த்து முழக்கமிடுகின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எகிப்து நாட்டு மக்கள்.

ஈரானுடனான பகை, அமெரிக்க உறவு, இஸ்ரேலுடனான நல்லிணக்கம், இஃவானுல் முஸ்லிமீனுக்கு கடுமையான எதிர்ப்பு ஆகியவற்றில் முபாரக்கிற்கு சமமாகவோ அல்லது அதைவிட அதிகமான சிந்தனையைக் கொண்டவர் 74 வயதான உமர்சுலைமான்.

ராணுவத்தின் உதவியுடன் பாதுகாப்பாக ஆட்சியை விட்டு வெளியேறி உமர்சுலைமானை அதிபராக நியமிப்பதுதான் ஹுஸ்னி முபாரக்கின் திட்டம் எனக் கருதப்படுகிறது. இதற்கு அமெரிக்காவின் ஆசிர்வாதமும் பெறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சுலைமானை துணை அதிபராக நியமித்த அதேநாளில்தான் முன்னாள் விமானப்படை தலைவரான அஹ்மத் ஷஃபீக்கை பிரதமராக ஹுஸ்னி முபாரக் நியமித்தார். இது ராணுவத்திற்கு கட்டுப்பாட்டை வழங்குவதன் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

கெய்ரோவிலுள்ள அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய செய்தியில், உமர் சுலைமான் அமெரிக்காவின் உறவின் என சிறப்பித்துக் கூறிய தகவலை சமீபத்தில் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் இடம் பெற்றிருந்தது.

லெபனான், ஈராக், இஸ்ரேல்-ஃபலஸ்தீன் பிரச்சனை ஆகியவற்றில் எகிப்து அமெரிக்காவுடன் இணைந்து செயல்படும் என சுலைமான் கூறியதாக விக்கிலீக்ஸின் ஆவணம் தெரிவிக்கிறது.

தனது மகன் ஜமால் முபாரக்கை அடுத்த அதிபராக நியமிக்க ஹுஸ்னி முபாரக் திட்டமிட்டிருந்த போதிலும் உமர் சுலைமானுக்குத்தான் அமெரிக்காவின் பட்டியலில் முதலிடம் என்பது குறிப்பிடத்தக்கது.

முபாரக்கை எகிப்து நீதியின் முன்னால் நிறுத்தும்: இஃவானுல் முஸ்லிமீன்
கடந்த 30 ஆண்டுகளாக மக்களின் உரிமைகளை அபகரித்த ஹுஸ்னி முபாரக்கை எகிப்து நாட்டு மக்கள் நீதியின் முன்னால் நிறுத்துவார்கள் இஃக்வானுல் முஸ்லிமூன் தலைவர் முஹம்மது கானேம் தெரிவித்துள்ளார். லண்டனில் பிரஸ் டிவிக்கு அளித்த பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.

சொந்த நாட்டின் முடிவை தீர்மானிக்கும் மக்களின் உரிமைகளை முபாரக் நீண்டகாலமாக அபகரித்துள்ளார். போக்கிரிகளின் துப்பாக்கி முனையில் அவர் எகிப்தை ஆட்சிபுரிந்தார். இதற்கெதிராகத்தான் எகிப்து நாட்டு மக்கள் எழுச்சிப் பெற்றுள்ளனர். இந்த சர்வாதிகாரியை ஆட்சியை விட்டு அகற்றாமல் மக்கள் அடங்கமாட்டார்கள் என முஹம்மது கானேம் தெரிவித்தார்.

சிலரை மாற்றி தந்திரங்களை மேற்கொண்டு வருகிறார் முபாரக் என தெரிவித்த கானேம் போராட்டத்தில் மரணித்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதலை தெரிவித்துள்ளார். நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் .ஆயிரத்திற்குமேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கோடிக்கணக்கான பணம் மதிப்புடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் ஒரு தனி மனிதருக்கும் அவருடைய குடும்பத்தினருக்காகவும் நிகழ்ந்துள்ளது. எகிப்து நாட்டு மக்கள் இதனை ஒருபோதும் மறக்கமாட்டார்கள். அவர் அடங்கியிருக்கமாட்டார்கள். முபாரக் நீதிமன்றத்தில் ஆஜராக்கப்பட்டு சிறைக்குள் அடைக்கப்படுவதையும் காண்பதற்காகத்தான் எகிப்திய மக்கள் காத்திருக்கின்றனர்.

தற்பொழுது எகிப்தின் வீதிகளில் நடைபெறும் மக்கள் எழுச்சி ஏதோ எதேச்சையாக உருவானது அல்ல. நாட்டிற்கு நல்லதை நாடியவர்கள் முபாரக்கை பலமுறை எச்சரித்துள்ளனர். ஆனால், அவற்றையெல்லாம் காது கொடுத்து கேட்க முபாரக் தயாராகவில்லை. இறுதியாக மக்கள் அவருக்கான தீர்ப்பை எழுத உள்ளனர்.

அமெரிக்காவிற்கோ அல்லது வேறு எவருக்கும் எகிப்திய மக்களை திருப்தி படுத்த இயலாது. அமெரிக்காவிடமிருந்து எங்களுக்கு எவ்வித உதவியும் தேவையில்லை. அது ஒருபோதும் எங்களுக்கு உதவாது. புரட்சி தற்பொழுது துனீசியாவிலிருந்து எகிப்தை வந்தடைந்துள்ளது. அல்லாஹ்வின் கருணையினால் இப்புரட்சி அரபுலகம் முழுவதும் பரவும் என நம்புவதாக முஹம்மது கானேம் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை: