வெள்ளி, 26 நவம்பர், 2010

குவைத்-ஈராக் எல்லை முடிவுக்கு வந்தது

ஈராக் மற்றும் குவைத் நாடுகளுக்கிடையே பல ஆண்டுகளாக நிலவி வந்த எல்லைத் தகராறுக்கு பரிகாரம் ஏற்பட்டுள்ளது.தகராறு தொடர்பாக இருநாடுகளும் ஒப்பந்தம் செய்துள்ளதாக குவைத் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அரப் வேர்ல்ட் துறை தலைவர் ஜாஸிம் அல் முபாரக்கி பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின்படி இருநாடுகளும் எல்லையில் 500 மீட்டர் இடத்தை ஆளில்லா நிலமாக ஒதுக்கும். ஈராக்கி விவசாயிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கும் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என அல்ஸெயாஸாஹ் தின இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

எல்லையில் வசிக்கும் விவசாயிகளுக்காக ஈராக்கின் உள்புறம் குவைத் 50 வீடுகளை நிர்மாணித்து வழங்கும். இரு நாடுகளும் ஒதுக்கும் 500 மீட்டர் இடத்தில் எல்லை போலீசாரின் செயல்பாடுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகங்களின் கமிஷனுகளுக்கிடையே சமீபத்தில் நடந்த சந்திப்பின்போது இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஈராக்கின் குவைத் ஆக்கிரமிப்பிற்கு பிறகு 1993 ஆம் ஆண்டு ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நிறைவேற்றிய தீர்மானத்தில் இரு நாடுகளின் எல்லையை நிர்ணயித்திருந்தது.

ஈராக் கைப்பற்றிய சில பிரதேசங்கள் குவைத்திற்கு வழங்கப்பட்டுள்ளன. இருநாடுகளும் நிபந்தனைகளை கடைப்பிடிக்காததால் பிரச்சனைகள் நிலவி வந்தன.

கருத்துகள் இல்லை: