புதன், 24 நவம்பர், 2010

ஆப்கன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலி தாலிபான் கமாண்டர்

வாஷிங்டன்,நவ.24:மூத்த தாலிபான் கமாண்டர் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு ஆப்கான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியவர் போலி என நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தாலிபானின் உயர் கமாண்டர் முல்லா அக்தர் முஹம்மத் மன்சூர் எனக் கருதி ஆப்கான் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு தயாராயினர். ஆனால், அவர் தாலிபானின் அடிமட்ட உறுப்பினர்கூட இல்லை என்பது பின்னர் தெளிவானது. ஆனால், பெருந்தொகையை பெற்றுக் கொண்ட அந்த நபர் மாயமானார்.

பாகிஸ்தானிலிருந்து வந்த இந்த போலி கமாண்டர் ஆப்கான் அதிகாரிகளுடன் 3 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நேட்டோ ஒத்துழைப்புடன் இப்பேச்சுவார்த்தை நடந்துள்ளது. நேட்டோ விமானத்தில் காபூலிற்கு வந்த இவர் ஆப்கன் அதிபர் ஹமீத் கர்ஸாயியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஒன்பது ஆண்டுகள் நீண்ட ஆப்கான் போரை எப்படியாவது முடிவுக்கு கொண்டு வந்தாகவேண்டும் என்ற ஆப்கன் - அமெரிக்க அதிகாரிகளின் பதட்டத்தை இச்சம்பம் நிரூபிப்பதாக பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லா முஹம்மதை அடுத்து தாலிபானின் முக்கியத் தலைவர் முல்லா மன்சூர் ஆவார். துவக்கம் முதலே இவர் முல்லா மன்சூர்தானா? என்பதுக் குறித்து தாங்கள் சந்தேகித்ததாக தற்பொழுது அமெரிக்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

காந்தஹாரில் வைத்து மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் பொழுது முல்லா மன்சூருக்கு அறிமுகமான ஒருவர் இந்த நபரைக் குறித்த சந்தேகத்தை வெளிப்படுத்தினார். ஆனால், அதற்குள்ளாகவே இவர் பெருந்தொகையை வாங்கிவிட்டு இடத்தை காலிச் செய்தார்.

கடந்த மாதம் சமாதானப் பேச்சுவார்த்தைக் குறித்த கட்டுரையில் முல்லா மன்சூரின் பெயரை தவிர்க்கவேண்டும் என வெள்ளை மாளிகை நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

பேச்சுவார்த்தை முறியாமலிருக்கவும், முல்லா மன்சூரின் உயிருக்கு ஆபத்து எதுவும் ஏற்படாமலிப்பதற்காகவும்தான் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மேலும் இப்பேச்சுவார்த்தையில் கலந்துக்கொண்ட மேலும் இரண்டு நபர்களின் பெயர்களை வெளியிடக் கூடாது என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

ஆனால், அந்த பேச்சுவார்த்தையின் நாயகனாக விளங்கியவர்தான் இந்த போலி முல்லா மன்சூர். இச்சம்பவம் வெளியானதைத் தொடர்ந்து நேட்டோவும், ஆப்கான் அரசும் அவமானத்தில் மூழ்கியுள்ளன.

கருத்துகள் இல்லை: